இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பபட்டதற்கான விசாரணை இன்று

நாடாளுமன்றத் தேர்தல் திகதி குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் இன்றும் நாளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் திகதியாக நிர்ணயிக்கப்பட்டு ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்து
எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக குறித்த பொதுத் தேர்தல் திகதியை ஒத்திவைத்ததுடன், புதிய திகதியாக ஜூன் 20ஆம் திகதியை நிர்ணயித்து புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது.
குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் அரசியலமைப்புக்கு முரணான வகையில் அமைந்துள்ளதாகவும், அதன்மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 7 அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் மகனான வழக்கறிஞர் சரித குணரத்ன (Charitha Gunaratne), சமூக செயற்பாட்டாளரான விக்டர் ஐவன், பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆகியவற்றினால் குறித்த அடிப்படை உரிமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
இந்த நீதியரசர்கள் குழாமின் தலைவராக, நீதியரசர் ஜயந்த ஜயசூரிய செயற்பட உள்ள அதேவேளை, புவனெக அலுவிஹாரே, சிசிர த அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் ஏனைய நீதியரசர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த அடிப்படை உரிமை மனுக்களுடன் தொடர்புடைய 11 இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *