பெரிய வியாபாரிகளுக்கு போன்றே சிறிய வியாபாரிகளுக்கும் வங்கிகள் உதவ வேண்டும்

நாட்டில் கடந்த காலங்களில் வங்கிகளில் இருந்து கடன்பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாதவர்களில் அதிகமானவர்கள் ஏழைகளன்றி பணக்காரர்களேயாகும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, வங்கிகளின் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பிந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான நிகழ்ச்சித்திட்டத்திற்கு வங்கித் துறையை பங்குதாரராக்கிக் கொள்ளுதல் மற்றும் அதன்போது வங்கித் துறையில் உருவாகியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு.டீ. லக்ஷ்மன் உட்பட பிரதி ஆளுநர்கள், அரச மற்றும் தனியார் துறை வங்கித் தலைவர்கள் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கொரோனா வைரஸை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க அரசுக்கு முடியுமாக இருந்தது. தற்போதுள்ள பெரும் சவால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகும். ஆடைக் கைத்தொழிலை வழமை நிலைக்கு கொண்டுவர நீண்ட காலம் செல்லும். சுற்றுலா துறையிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இழந்த வருமானம் மற்றும் தொழில்கள் மிகவும் பெரியதாகும். பழைய இறக்குமதி முறைமையை தொடரந்தும் முன்னெடுக்க முடியாது. நாம் உற்பத்தி பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக செயற்திறமாக பங்களிப்பதற்கு வங்கித் துறையினருக்கு முடியும்’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கொரோனா பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு சுகாதாரத் துறை உள்பட அனைத்து தரப்பினரும் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, வங்கித் துறையிடமும் அத்தகைய பங்களிப்பை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
தற்போதுள்ள முக்கிய தேவை உற்பத்தி பொருளாதாரத்தை பலப்படுத்துவதாகும். இதற்காக முதலிடக்கூடிய பல துறைகள் உள்ளன. தேயிலை உள்பட பெருந்தோட்ட கைத்தொழில், சிறிய மற்றும் நடுத்தர உற்பத்திகள், வீடுகள் மற்றும் ஏனைய நிர்மாணத் துறை, விவசாயத்துடன் தொடர்புடைய உற்பத்திகள் பெறுமதி சேர்க்கப்பட்ட கறுவா, மிளகு போன்ற பயிர்கள் அவற்றில் சிலவாகும்.
இத்துறைகளில் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்காக இலகுவான நிபந்தனைகளின் கீழ் கடன் வழங்குமாறு ஜனாதிபதி வங்கிச் சமூகத்திடம் கேட்டுக்கொண்டார்.
‘வாகனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் போன்ற இறக்குமதிக்காக கடன் வழங்கி இலகுவாக இலாபமீட்டும் முறைமையை தொடர்ந்தும் பேண முடியாது. புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னுரிமைகளுக்கே அதிகம் கடன் வழங்கப்பட வேண்டும். விவசாயிகள் அதிக வட்டிக்கு வியாபாரிகளிடம் கடன் பெறுகின்ற போது அவர்கள் வியாபாரிகளினால் சுரண்டப்படும் நிலைக்கு ஆளாகின்றனர். அது எல்லா வகையிலும் பாதிப்பானதாகும்.

பெரிய வியாபாரிகளுக்கு போன்றே சிறிய வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் வங்கிகள் உதவ வேண்டும்.’ என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, கடன் வழங்கியதன் பின்னர் அதன் மூலம் பயன்பெறும் விதம் குறித்து தொடர்ந்தும் தேடிப்பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் வங்கிகளில் இருந்து கடன்பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாதவர்களில் அதிகமானவர்கள் ஏழைகளன்றி பணக்காரர்களேயாகும் என்று குறிப்பிட்டார். மத்தியதர வர்க்கத்தினருக்காக வீடுகளை நிர்மாணித்து சலுகை விலையில் அவற்றை வழங்குவதற்கு தனது கொள்கை பிரகடனத்தில் உறுதியளித்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அத்தகைய சந்தர்ப்பங்களில் மத்தியதர வர்க்கத்தினருக்கு குறைந்த வட்டிக்கு கடன் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
கலந்துரையாடலில் பங்குபற்றிய வங்கிப் பிரதிநிதிகள் பொருளாதார புத்தெழுச்சிக்காக அரசு முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டனர். அவர்கள் வங்கித் துறை முகம்கொடுத்துள்ள சில பிரச்சினைகளையும் முன்வைத்ததுடன், மத்திய வங்கியுடன் கலந்துரையாடி அவற்றை தீர்த்துக்கொள்ளவும் இணக்கம் தெரிவித்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *