இலங்கை கடற்படையினருக்கு எவ்வாறு கொரோனா பரவியது? அதிர்ச்சி தகவல்!

வெலிசறையில் கடற்படையினருக்குத் தொற்றத் தொடங்கிய பின்தான் இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் – பதற்றம் மேலும் அதிகரித்தது.

யாரும் எதிர்பார்த்திராத வேகம்… எதிர்பார்த்திராத எண்ணிக்கை.. கிடுகிடு… சடாரெனப் பிடித்துக்கொண்டது 400 இற்கும் மேற்பட்ட கடற்படையினரை.

இதனால் கொரோனாவுக்கு எதிராக ஓடி ஓடி உழைத்த படையினர் ஓரிடத்தில் சுருள வேண்டிய நிலை.

விடுமுறையில் சென்ற படையினரால் நாட்டின் பல இடங்களில் கொரோனா பரவும் அபாயம் வேறு.

இப்படியொரு திடீர் தொற்று… திடீர் பரவல்… ஏற்பட்டது எப்படி?

அதைப்பற்றித்தான் பார்க்கப் போகின்றோம் இந்தக் கட்டுரையில்…

இந்தநிலைக்கு முதல் காரணம் குடுக்காரர் ஒருவர்தான்.

ஏப்ரல் 5ஆம் திகதி… நள்ளிரவு… ஒரு கொள்ளைச் சம்பவம்.

ஜா – எல, பமுனுகமவில் திடீர் சலசலப்பு… அந்த நள்ளிரவில் திருடன் ஒருவன் ஒரு வீட்டுக்குள்..!

வேகமாக அலேர்ட்டானது அப்பகுதி. ஒரே அமுக்கு… சிக்கிவிட்டான் திருடன். பொறி வைத்துப் பிடித்துவிட்டனர் அப்பகுதி மக்கள். செம அடி… பொலிஸிடம் ஒப்படைப்பு.

திருடன் இப்போது பமுனுகம பொலிஸ் நிலையத்தில். அவன் ஒரு ஓட்டோ சாரதி. கூடவே அவன் ஒரு குடுக்காரன் (போதைப்பொருள் பாவனையாளன்).

ஊரடங்கால் தொழில் பாதிப்பு. ஓட்டோ ஓடவில்லை. கையில் பணமில்லை. குடு அடிக்க வழியில்லை… திருடுவதே ஒரே வழி.

பசி முக்கியமல்ல. குடுவே முக்கியம். ஆனால், பணமில்லை அதற்கு. திருட வந்தான். வசமாக சிக்கிவிட்டான்.

அன்று இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருடன், அடி காயங்களோடு மறுநாள் காலை ராகம வைத்தியசாலையில் காயத்துக்கு மருந்து போடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டான்.

எதிர்பாரா அதிர்ச்சி அங்கு… என்ன அது? திருடனுக்கு கொரோனா.

பிடித்தவர்கள்… அடித்தவர்கள்… கைது செய்தவர்கள்… பரிசோதித்தவர்கள்… எல்லோரும் அச்சத்தில் இப்போது!

பின்னர் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டார்கள். ஜா – எல பமுனுகமவில் 12 குடும்பங்கள், பமுனுகம பொலிஸ் நிலையம், ராகம வைத்தியசாலை வாட் தொகுதி இப்படியொரு பட்டாளமேதனிமைப்படுத்தலில்.

பொலிஸ் நிலையம் ஒன்று முழுமையாக மூடப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்ளானமை இதுதான் முதல் தடவை.

அடுத்து என்ன? அவன் பழகிய அத்தனை பேரையும் அள்ள வேண்டும். அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கும் அல்லவா. அவ்வாறு 28 பேர். அத்தனை பேரும் குடுக்காரர்கள். அவன் கொடுத்த பட்டியல் அது.

களத்தில் இப்போது வெலிசறை கடற்படை புலனாய்வுப் பிரிவினரும் சிப்பாய்களும்….

அவர்கள் ஜா – எல, சுதுவெல்லயில் இருப்பதாகத் தகவல். அந்தப் பகுதி முழுவதும் சுற்றிவளைப்பு. குடுக்காரர்கள் தப்பியோட முயன்றனர். ஆனாலும், போராடி ஒரே அமுக்கு.

எதற்காக இந்தக் கைது? புரியவில்லை அவர்களுக்கு. பின்னர் விளக்குகினார்கள் கடற்படையினர். அழைக்கிறார்கள் தனிமைப்படுத்தலுக்கு.

தனிமைப்படுத்தல் என்றால் என்ன? அது பற்றிய தெளிவுகூட இல்லை அந்த 28 பேரிடமும். மறுக்கின்றார்கள் அதற்கு.

தெளிவுபடுத்திய கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் அவர்களை இணங்க வைக்கின்றார். பின்னர் ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அத்தனை பேரும் கொண்டுபோய் விடப்பட்டார்கள்.

இத்தோடு முடிந்தது கதை. அப்படித்தான் நினைத்தார்கள் கடற்படையினர். ஆனால், ஆட்டமே அதன் பின்தான்.

தனிமைப்படுத்தப்பட்ட 28 பேரில் 6 பேருக்கு கொரோனா. ஒலுவிலில் நடத்திய பி.சி.ஆர். சோதனையின் முடிவு இது..

அடுத்து என்ன? இவர்களைப் பிடித்த படையினரைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் கற்பிட்டியில் உள்ள கடற்படை விடுமுறை விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.

குடுக்காரனைப் பிடித்த அணியில் இருந்த, ஆனால் இந்தத் தனிமைப்படுத்தல் பட்டியலுக்குள் சிக்காத கடற்படை சிப்பாய் ஒருவர் வெலிசறை முகாமுக்குத் திரும்புகின்றார். அப்படி வந்தவர் வெறுமனே வரவில்லை. எவ்வித நோய் அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸோடுதான் வந்திருந்தார்.

கடற்படைத் தளத்தில் இருந்து விடுமுறையில் சென்ற அந்தச் சிப்பாய், அங்கிருந்து அவரது வீட்டுக்கு… உறவினர்கள்… சக படையினர்… நண்பர்கள்… இப்படி எல்லோருடனும் உறவாடியிருந்தார். வெளியிடங்கள் பலவற்றுக்கும் விசிட் வேறு.

அதற்கிடையில் இவரால் கொண்டு செல்லப்பட்ட வைரஸ் பரவத் தொடங்குகின்றது வெலிசறை முகாமுக்குள். கடற்படை நடனக் குழுவில் உள்ள சிலருக்கே முதலில் தொற்று இனங்காணப்பட்டது.

ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்களை உற்சாக மூட்டுவதற்காக அவ்வாறான இடங்களுக்குச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தி வருபவர்கள் அவர்கள்.

அவர்களுடன் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றை கட்டுநாயக்க விமானப் படையினர் நடத்தியிருந்தனர். அவர்களுக்கும் தொற்று. அத்தோடு, விடுமுறையில் சென்றிருந்த இராணுவச் சிப்பாய்கள் – கடற்படையினர் தொற்றுடனேயே வீடுகளுக்குச் சென்றனர்.

இதனால் முப்படைக்குள் பெரும் பதற்றம். விடுமுறையில் சென்ற படையினர் மீள அழைக்கப்பட்டனர். விடுமுறையின்போது அவர்களுடன் பழகியவர்களைத் தேடத் தொடங்கியது புலனாய்வுப் பிரிவு. சுமார் 8 ஆயிரம் பேர் கண்டுபிடிக்கப்பட்டு, எல்லோரும் இப்போது தனிமைப்படுத்தலில்.

கொரோனாவால் முற்றாக முடங்கியது வெலிசறை கடற்படை முகாம். பி.சி.ஆர். பரிசோதனை தீவிரமானது. வைரஸ் தொற்றியவர்களிடம் நோய் அறிகுறிகள் தென்படாமையே பரவல் அதிகரிக்கக் காரணம் என்கின்றது கடற்படை.

இப்படித்தான் வெலிசறை முகாமுக்குள் நுழைந்தது அந்த வைரஸ். அந்த முகாமை மட்டும் பதம் பார்க்கவில்லை கொரோனா. வெளியே விமானப் படை – தரைப்படை என முப்படைகளையும் ஒரு கை பார்த்தது.

நாளுக்கு நாள் அவர்களுக்கிடையே கொரோனா அதிகரிக்கின்றது .முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கு – அதில் இருந்து படையினரை மீட்டெடுப்பதற்கு முழு மூச்சாக இறங்கி நிற்கின்றது அரசு.

முழு நாடுமே சுகம் பெற வேண்டும். அனைவரும் நலம் பெற வேண்டும். நாடு வளம்பெற வேண்டும். வழமைக்குத் திரும்ப வேண்டும். இதுவே மக்களின் அவா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *