மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்

குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மூன்று முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்ததாக என்று இந்திய  அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்தார். சமூக ஊடகம் ஒன்றில் சக வீரர் ரோகித் ஷர்மாவுடன் உரையாடியபோது ஷமி கூறியதாவது: 2015ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியின்போது  ஏற்பட்ட காயம் காரணமாக 18 மாதங்கள் ஓய்வில் இருந்தது வாழ்க்கையில் கடுமையான காலகட்டமாகும். அதிலிருந்து மீண்டுவந்து மீண்டும் கிரிக்கெட்  வாழ்க்கையை தொடங்கியபோது குடும்ப பிரச்சனையாலும், அது பற்றி ஊடகங்களில் வந்த செய்திகளாலும் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானேன்.

அப்போது என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டது.  தற்கொலை செய்துகொள்ளலாம் என்று கூட மூன்று முறை  யோசித்திருக்கிறேன். நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று என் குடும்பத்தினரும் பயந்தனர். எனது சகோதரர் எனக்கு எப்போதும் ஆதரவாக  இருந்தார்.  நாங்கள் அப்போது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 24வது மாடியில் வசித்து வந்தோம். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து  கொள்வேன் என்று குடும்பத்தினர் பயந்தார்கள். அதனால் என்னை எப்போதும் கண்காணித்த வண்ணம் இருந்தனர்.  கூடவே எனது நண்பர்கள் சிலர் 24 மணி நேரமும் என்னுடனே எனக்கு ஆதரவாக  இருந்தனர்.

குடும்பத்தினரின் ஆதரவே பிரச்னையில் இருந்து மீள உதவியது. பெற்றோரின் ஆலோசனைப்படி கவனத்தை கிரிக்கெட் பக்கம்  திருப்பினேன். மீண்டும் பயற்சி செய்ய ஆரம்பித்தேன். டேராடூனில் உள்ள ஒரு அகடமியில் தங்கி கடுமையாகப் பயிற்சியை தொடர்ந்தேன். எனது  குடும்பமும் கிரிக்கெட்டும் இல்லாவிட்டால் அந்த மன அழுத்தத்திலிருந்து என்னால் மீண்டு இருக்க முடியாது. இவ்வாறு ஷமி தெரிவித்தார். இவரது மனைவி அசின் ஜஹான், தன்னை கணவர் ஷமி கொடுமை செய்வதாக குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ்  2018ல் புகார் அளித்தார்.

இது குறித்து மேற்கு வங்க மாநில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கை  அவ்வளவுதான் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், 2019ல் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அற்புதமாகப்  பந்துவீசி அசத்தினார். இந்நிலையில் 3 முறை தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாக அவர் தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது….