உலக சுகாதார தினத்தில் உலக மக்கள் நலமா?

ஐ.நா சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள், உலகளாவிய அளவில் சுகாதாரத்தைப் பேண தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று 1945-ம் ஆண்டில் குரல் கொடுத்தன.
இதைத்தொடர்ந்து இதுதொடர்பான விவாதங்கள் ஐநா சபையில் தொடர்ந்து நடைபெற்றன.

இந்த விவாதங்களின் விளைவாக 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார அமைப்பு (WHO) உருவாக்கப்பட்டது. இதன் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.
இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படும் சூழலில் உலக சுகாதாரத்தைப் பற்றிய சில முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்:

உலக அளவில் ஏற்படும் மரணங்களில் சுமார் 30 சதவீதம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படுகிறது.
இவர்களில் 80 சதவீதத்தினர் சரியான உணவுகளை உட்கொள்ளாதது, உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் இதய நோய்களுக்கு ஆளாகி இறக்கின்றனர்.

உலக மக்கள் தொகையில் சுமார் 50 சதவீதம் பேர் இன்னும் சரியான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
2017-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சுமார் 800 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் (அதாவது உலக மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர்) தங்கள் மொத்த வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் மேல் நோய்களை சமாளிப்பதற்காக மருந்துகளை வாங்க செலவிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள கழிப்பறைகளின் எண்ணிக்கையைவிட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

கழிப்பறை வசதி இல்லாமல் வெளியிடங்களில் காலைக் கடன்களைக் கழிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உலக சுகாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கழிப்பறைகளை அமைத்தல், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றால் உலக அளவில் நம்மால் 10 சதவீத நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன் 6.2 சதவீத இறப்புகளைத் தடுத்து நிறுத்த முடியும்.
சுகாதார அமைப்புகள் வலுவற்றதாக இருப்பதால் ஆண்டுதோறும் 66 லட்சம் குழந்தைகள் பல்வேறு நோய்களால் இறந்து வருகிறார்கள். முறையான சிகிச்சை அளித்தால் இதில் பாதி குழந்தைகளையாவது காப்பாற்ற முடியும்.
சராசரியாக நாளொன்றுக்கு 800 பெண்கள், பிரசவத்தின்போது போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இறக்கின்றனர்.

எய்ட்ஸ், மலேரியா, காசநோய் ஆகிய 3 நோய்களும் இணைந்து கொல்லும் மக்களைவிட வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா காய்ச்சலால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதில் வளரும் நாடுகளிலேயே அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

உலக மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடல் எடை குறைந்தவர்களைவிட இவர்கள்தான் அதிக அளவில் நோய்களால் இறக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *