தொடர்கிறது உண்ணாவிரதம்; கல்முனையில் பெரும் பதற்றம்! – களமிறங்கினார் கருணா; வியாழேந்திரன், கோடீஸ்வரனும் பங்கேற்பு

அம்பாறை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமும் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு கோரி குறித்த உப பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

கடந்த இரண்டு நாட்களை விடவும் இன்று அதிக மதகுருமார், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை, உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினகளான எஸ்.வியாழேந்திரன், க.கோடீஸ்வரன் ஆகியோரும் இன்று சென்றனர். இவர்கள் மூவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபவர்களுடன் உரையாடினார்கள்.

கடந்த திங்கட்கிழமை காலை தொடக்கம் கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத் தலைவரும் கல்முனை முருகன் ஆலயப் பிரதம குருவுமான சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை கிறிஸ்தவ போதகர் அருட்தந்தை கிருபைராஜா, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டக்காரர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகளை மட்டும் வைத்தியர்கள் வழங்கி வருகின்றனர். மேலதிக சிகிச்சைகளுக்குப் போராட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் அமைந்துள்ள பிரதான வீதியில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றது. பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக கல்முனை புறநகர் பகுதிகளில் நேற்றிரவு ரயர்கள் எரிக்கப்பட்டன. மர்மக் கும்பல் ஒன்று இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது. பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்தப் பகுதிகளுக்குச் சென்று எரிந்துகொண்டிருந்த ரயர்களை அப்புறப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *