இலங்கையிலும் ‘கொரோனா!’ சீனப் பெண்ணே அடையாளம்!! – கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனைகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அங்கொடையிலுள்ள தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த 43 வயதுடைய சீன நாட்டு பெண்ணொருவரே ‘கொரோனா’ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் சீனாவை வதைத்து வருகின்ற நிலையில், அந்த நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வௌியேறும் பிரிவினூடாக வௌியேற்றுவதற்கு இன்றிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் விசேட மருத்துவப் பிரிவினூடாகப் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனவும் விமான நிலையத்தின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் அனைத்து ஊழியர்களையும் முகக்கவசத்தை அணிந்துகொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

பலியானோர்
எண்ணிக்கை
90 ஆக உயர்வு

சீனாவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்வடைந்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது.

இந்த வைரஸால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சீனாவின் தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஹுபெய்யை சுற்றியுள்ள மாகாணங்களிலும் பெருத்த சேதங்களை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகின்றது.

சீனா முழுவதும் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 80 ஆக ஆக உயர்வடைந்துள்ளது. அங்கு 90,000 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

அதில் 1,975 பேரை வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சையில் இருக்கும் அவர்களில் 324 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *