புதிய அரசமைப்பு வரைபை விட சஜித்தின் விஞ்ஞாபனம் ஆபத்து! – கண்டமேனிக்கு உளறுகிறார் மஹிந்த

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசமைப்பு வரைபை விடவும் ஆபத்தானதாகவே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.”

– இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ஒற்றையாட்சி சித்தாந்தத்திலிருந்து விலகி, இணைக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத இராஜ்ஜியம் ஒன்று தொடர்பான அறிமுகம் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் கொள்கைப் பிரகடனத்தில் புதிய அரசமைப்பு குறித்த பகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அதிகாரங்களை மாகாண சபைகளுக்குக் கூடியளவு பகிர்ந்தளிப்பதாகவும் அந்தக் கொள்ளைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமரால் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட உத்தேச புதிய அரசமைப்பு தொடர்பான வரைபையும்விட ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் கொள்ளைப் பிரகடனம் ஆபத்தானதாகவே அமைந்துள்ளது.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பரந்துபட்ட வகையில் அதிகரிக்கவும், மாகாண சபைப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மாற்று சபையொன்றை உருவாக்கி அதனூடாக நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று சுயாதீனமாக நிதி சேகரிக்கும் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கவும், தற்போது மத்திய அரசின் கீழ் காணப்படுகின்ற மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களை மாகாண சபைகளுடன் இணைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையில் ஏற்படக் கூடிய முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கென விசேட அரசமைப்பு நீதிமன்றமொன்றை நிறுவுவதும் சஜித் பிரேமதாஸவின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது சுயாதீன மாகாண ஆட்சி அலகுகளைக் கொண்ட கூட்டு ஆட்சி முறைமையை உருவாக்குவதாகவே அமைகின்றது.

இலங்கையை சிங்கள மொழியில் ‘ஏக்கிய இராஜ்ஜிய’ என்றும் தமிழ்மொழியில் ‘ஒருமித்த நாடு ‘ என்றும் தலைமை அமைச்சர் தனது அரசமைப்பு வரைபில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசமைப்பில் விசேட விளக்கமளிப்புடனான ‘யுனிடரி ஸ்டேட்’ என்ற ஆங்கிலச் சொல்லை உள்ளடக்காது அரசமைப்பின் ஆங்கிலப் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சிங்கள மொழியில் ஒற்றையாட்சி என்று அர்த்தப்படுத்தப்பட்டாலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இலங்கை ஒற்றையாட்சியாக அமையாது.

இவ்வாறு பெரியதொரு ஏமாற்றுப்போக்கு சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் காணப்படுகின்றது. சிங்கள மக்களைத் தவறான வழிநடத்திய ஒரு நிலைப்பாடே சஜித்தின் விஞ்ஞாபனத்தில் காணப்படுகின்றது.

அதேவேளை, சஜித்தின் விஞ்ஞாபனத்தில் அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள சொற்களில் மொழிகளை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகின்ற வேறுபாடுகளை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே, பிரதமரால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசமைப்பு வரைபை விட மிகவும் ஆபத்தானதாகவும், சமஷ்டி கொள்கையுடையதுமானதாகவே சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் காணப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரமல்லாது அதற்கு வெளிப் பிரதேசங்களிலேயே கூடுதலாக தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இவ்வாறு மக்கள் வியாபித்து வாழ்கின்ற ஒரு நாட்டில் இனங்களை மையப்படுத்தி கூட்டு ஆட்சி முறைமையை ஏற்படுத்துவதென்பது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பிரிட்டன் காலனித்துவத்தில்கூட ஒற்றையாட்சி முறைமையை இல்லாதொழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் டொனமூர் மற்றும் சோல்பரி ஆணைக்குழுக்கள்கூட கூட்டு ஆட்சியை நிராகரித்தன.

இவ்வாறு நாட்டுக்கு எந்த வகையிலும் ஒவ்வாத சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களிடம் கையளித்தன் பின்னர் கண்டியில் வெளியிடப்பட்டது. இதனூடாக நாட்டையும் மகாநாயக்க தேரர்களையும் சஜித் அணியினர் தவறாக வழிநடத்தியுள்ளனர்.

நாட்டில் பிரதான கட்சியொன்று ஒற்றையாட்சியை நீக்கிவிட்டு கூட்டு ஆட்சியை ஏற்படுத்துவதற்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டமை இதுவே முதல் தடவையாகும். எனவே, இந்த விடயம் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். அதேபோன்று ஒற்றையாட்சியைப் பாதுகாத்து சமஷ்டிக்கு எதிராக செயற்படுவதாக எழுத்துமூலமான ஒரு உறுதிப்பாட்டை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். மகாநாயக்க தேரர்கள் முன்னிலையில் இந்த உறுதிப்பாடு இடம்பெற வேண்டும்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *