ஜனாதிபதித் தேர்தலில் குதிக்க 41 பேர் கட்டுப்பணம் செலுத்தல்! – நாளை வேட்புமனுத் தாக்கல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

காலை 9 மணியிலிருந்து முற்பகல் 11 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

வேட்புமனுக்கள் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு நாளை காலை 9 மணியிலிருந்து முற்பகல் 11.30 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் உட்பட மொத்தம் 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்கள்.

இவர்களில் சிலர் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யமாட்டார்கள் எனத் தெரியவருகின்றது.

நாட்டின் மொத்த மக்கள் எண்ணிக்கை 21 மில்லியன். இவர்களுள் 15.6 மில்லியன் பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருக்கின்றார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதேவேளை, வேட்புமனுத் தாக்கல் செய்யும் தினமான நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலக வளாகத்துக்குள் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்படும். இந்தப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக விமானப் படை தேர்தல் அலுவலகப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது. ஆளில்லா விமானத்தின் செயற்பாடுகளை விமானப்படை கண்காணிக்கும்.

நாளை இராஜகிரிய பிரதேசத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும், நாளை பிற்பகல் ஒரு மணி வரை இராஜகிரிய சரண மாவத்தை வீதி மூடப்படும் எனவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்படவுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அடங்கலாக 1,700 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கட்டுப்பணம் செலுத்திய 41 பேரின் விபரம் இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *