கூட்டமைப்பு ஆதரவைப் பெறும் ஐ.தே.கவின் முயற்சி பிசுபிசுப்பு! – தேர்தல் அறிக்கையின் பின் தீர்மானிப்போம் என்று ரணிலிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

 

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்ச களமிறக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றி தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளிலேயே தங்கியுள்ளது. இந்தநிலையில், பிரதான முஸ்லிம் கட்சிகள் சஜித்துக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளன. அதேவேளை, பெரும்பாலான மலையகக் கட்சிகளும் சஜித்துக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளன. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தீர்மானம் என்னவென்பதை அறிவிக்கவில்லை.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளும் கிடைத்தால்தான் சஜித்தின் வெற்றி உறுதி செய்யப்படும். இதை உணர்ந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அவசர சந்திப்புக்காக நேற்று அலரிமாளிகைக்கு அழைத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்றுப் பிற்பகல் 3 மணிக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்தார்கள்.

இதன்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, ரவி கருணாநாயக ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

“ஐக்கிய தேசியக் கட்சியால் ஜனாதிபதித் தேர்தலுக்காக முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதை ஒளிவு மறைவில்லாது நாட்டு மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டும்” என்று இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

“தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கும் தீர்வுத் திட்டத்தைப் பொறுத்தே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தை எடுப்போம்” எனவும் இதன்போது சம்பந்தன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பிரதமர் தலைமையிலான ஐ.தே.கவுடனான இந்தச் சந்திப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் உள்ளிட்ட தமிழ் மக்களின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் எழுத்துமூல உடன்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்து. எனினும், “எழுத்துமூல உடன்படிக்கைகள் செய்வதைவிட தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதை ஐக்கிய தேசியக் கட்சி வெளிப்படுத்தினால் அது நாட்டுக்கே நல்லதாக இருக்கும். அதனால்தான் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்” என்று இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ‘புதுச்சுடர்’ செய்திச் சேவையிடம் தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *