‘மொட்டு’ச் சின்னத்தை மீள்பரிசீலனை செய்ய 5 வரை கால அவகாசம்! – விதித்தது சுதந்திரக் கட்சி

‘தாமரை மொட்டு’ சின்னம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்காக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிர்வரும் 5ஆம் திகதிவரை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கு அவரது இல்லத்தில் கூடியது.

சுமார் மூன்றரை மணிநேரம் வரை நீடித்த இந்தச் சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தல், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடனான அரசியல் கூட்டணி உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக “சின்னம் முக்கியமில்லை. ஒருமித்த எண்ணங்கள்தான் முக்கியம். எனவே, கோட்டாபய ராஜபக்சவையே ஆதரிக்க வேண்டும்” எனச் ஒரு சிலரும், “தாமரை மொட்டுச் சின்னத்தில் தேர்தலைச் சந்தித்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனித்துவம் இல்லாமல் போய்விடும் என்பதால் மாற்றுவழி குறித்து பரீசிலனை செய்ய வேண்டும்” என மேலும் சிலரும் கருத்துக்களை முன்வைத்தனர்.

அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்துவத்தை ராஜபக்சக்களுக்குச் சார்பான உறுப்பினர்கள் சிலர் எடுத்துரைக்கையில் அதற்குச் சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால் கூட்டத்தில் சூடான வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.

இறுதியில் ‘தாமரை மொட்டு’ சின்னத்தை மீள்பரிசீலனை செய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிர்வரும் 5ஆம் திகதிவரை அவகாசம் வழங்குவதற்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கைகளை பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அனுப்பி வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டணி அமையும் பட்சத்தில் கைச்சாத்திடவேண்டிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் குறித்து சுதந்திரக் கட்சியால் அனுப்பிவைக்கப்படும் யோசனைகளுக்கு பொதுஜன முன்னணியிடமிருந்து இரு நாட்களில் அக்கட்சி பதிலை எதிர்பார்க்கின்றது.

அதன்பின்னர் எதிர்வரும் 5ஆம் திகதி சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மீண்டும்கூடி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் என்று கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, ‘தாமரை மொட்டு’ சின்னத்தைக் கைவிடுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாரில்லை என ராஜபக்சக்கள் அறிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை தாமரை மொட்டுச் சின்னத்திலும் அதன் பின்னர் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலைப் பொதுச் சின்னத்திலும் சந்திக்கலாம் எனவும் அவர்கள் யோசனை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *