கை – மொட்டு பேச்சு வெற்றி! மைத்திரி – மஹிந்த நேரில் சந்திக்க இணக்கப்பாடு!!

ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட இனிமேல் நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களையும் ஓரணியில் எதிர்கொள்ளும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பரந்துபட்ட கூட்டணியமைத்தலுக்கான 7ஆம் கட்டப் பேச்சு இணக்கப்பாட்டுடன் நிறைவுபெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்தப் பேச்சு நடைபெற்றது.

இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர எம்.பி. மற்றும் லசந்த அழகியவண்ண எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர்.

பரந்துபட்ட கூட்டணியமைத்தல் தொடர்பில் இதற்கு முன்னர் 6 தடவைகள் நடத்தப்பட்ட பேச்சுக்களில் இழுபறி நிலை காணப்பட்டது. எனினும், பரந்துபட்ட கூட்டணி விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தலைமையில் இன்றைய பேச்சு நடைபெற்றது.

இன்றைய பேச்சு வெற்றிகரமாக நடைபெற்றது எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் நேரில் சந்தித்துப் பேசுவதற்கு இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனவும் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *