தேர்தல் ஆணைக்குழுவை தேடிச் சென்றார் கோட்டா! – இரட்டைக் குடியுரிமைச் சர்ச்சைகளையடுத்து ஆவணங்களைக் காண்பித்தார் என்று தகவல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச நேற்று தேர்தல் ஆணைக்குழுவை அவசரமாகச் சந்தித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவினரிடம் அவர் தனது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான மூல ஆவணங்களைக் காண்பித்தார் என்று அறியமுடிந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அண்மையில் அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவால் அறிவிக்கப்பட்டார். அவர் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்த நிலையில் அது தொடர்பாகப் பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இலங்கையின் 19ஆவது திருத்தச் சட்டத்தின்படி இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கைக் குடிமகன் நாட்டின் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது. கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமையைக் கொண்டிருந்ததால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று பல தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து விட்டதாக கோட்டாபாயவும், அவரது ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர். எனினும், அது தொடர்பான ஆவணங்கள் எதனையும் அவர் பகிரங்கப்படுத்தவில்லை. அண்மையில் அமெரிக்காவால் வெளியிடப்பட்ட குடியுரிமை துறப்போர் பட்டியலிலும் கோட்டாபயவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை.

இந்தநிலையில், நேற்று அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவினரை மூத்த சட்டத்தரணி சிப்லி அலிஸ் சகிதம் சென்று சந்தித்துள்ளார் என்று அறியமுடிந்தது. அவர் தனக்கு அமெரிக்கக் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் வழங்கிய மூல ஆவணத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் காண்பித்தார் என்றும் அறியக் கிடைத்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அதன் இரண்டு உறுப்பினர்களும் அங்கு இருந்துள்ளனர். அவர்கள் அந்த ஆவணங்களைப் பரிசீலித்துள்ளனர்.

“2005ஆம் ஆண்டு நீங்கள் அமெரிக்கக் குடிமகனாக இருந்தநிலையில், இலங்கையின் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதே?” என்று கோட்டாபயவிடம் அவர்கள் வினவியுள்ளனர்.

“அமெரிக்கக் குடியுரிமை பெற்றதை அறியாது எனது சகோதரர் இலங்கையின் வாக்காளர் பட்டியலில் எனது பெயரைப் பதிவு செய்துவிட்டார். ஆனால், 2005 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த எந்தத் தேர்தலிலும் நான் வாக்களிக்கவில்லை” என்று கோட்டாபய கூறியுள்ளார்.

“தற்போது உங்களால் ஆவணங்கள் காண்பிக்கப்படுகின்றன. குடியுரிமை துறப்பு ஆவணம் என்று போலியான ஆவணங்கள் வெளியிடப்பட்டன என்று கூறப்படுகின்றதே?” என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவினர் கேட்டுள்ளனர்.

“எனது ஆதரவாளர் என்று கூறப்படும் ஒருவர் அந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளார். எனக்கு அது தொடர்பாக எதுவும் தெரியாது” என்று கோட்டாபய பதிலளித்துள்ளார்.

“நீங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் நீங்களே கையொப்பமிட்டு இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொண்டீர்கள் என்று கூறப்படுகின்றதே?” என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவினர் வினவியுள்ளனர்.

“எனக்கு முன்பு இருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின்படியே நான் இலங்கையின் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றேன்” என்று கோட்டாபய தெரிவித்துள்ளார் என்றும் அறியமுடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *