வடக்கு, கிழக்கில் இருந்து முகாம்கள் அகற்றப்படாது! – எனக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்கிறார் சவேந்திர சில்வா

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. முகாம்களை அகற்றுவற்தற்கான எந்தத் தேவையும் இப்போதுவரை இல்லை. எனது நியமனம் தொடர்பாக சர்வதேச சமூகம் வெளியிட்டுள்ள கருத்துக்களைக் கவனத்தில் கொள்ளவில்லை.”

– இவ்வாறு புதிய இராணுவத் தளபதி லெப். ஜெனெரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த மாத இறுதியில் நடத்தப்படவுள்ள பாதுகாப்புக் கருத்தரங்கு தொடர்பாக நேற்றுக் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு அரசியல்வாதிகள் என்னைப் பற்றி முன்வைக்கும் கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடாகும். அது தொடர்பாக நான் எதுவும் கூற இயலாது. நான் ஒரு இனத்துக்கு மட்டுமான இராணுவத் தளபதி இல்லை. இந்த நாட்டில் சிங்கள மக்களைப் போலவே தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் இலங்கை மக்கள்தான். நான் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக் வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். எனது கடமையும் அதுவேயாகும்.

என் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் என்பவை நிரூபணமாகாத கூற்றுக்கள் என்றே நினைக்கின்றேன். போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை. மன்னார் புதைகுழியையும் போர்க்குற்றம் என்றார்கள். ஆய்வுகளின் பின்னர் அதற்கு வேறு காரணம் உறுதியானது. அதேபோன்றுதான் இந்தக் குற்றச்சாட்டுக்களும் மாற்று வடிவம் பெறலாம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *