மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்ற ஹக்கீம், ரிஷாத், அமீர் அலி, மஹ்ரூப்!

அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் நால்வர் இன்று மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளில் பதவிப் பிரமாணம் செய்தனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி அமைச்சராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ். அமீர் அலி விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராகவும், அப்துல்லாஹ் மஹ்ரூப் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அலுவல்கள் பிரதி அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்தனர்.

அமைச்சுப் பதவிகளை வகித்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்றாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரம் இன்று மீண்டும் பதவியை ஏற்றார். எச்.எம்.எம். ஹரீஸ் (அம்பாறை), அலிசாஹிர் மௌலானா (மட்டக்களப்பு), பைசல் காசீம் (அம்பாறை) ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவியை இன்று ஏற்கவில்லை.

ஏற்கனவே ஹரீஸ் இந்தப் பதவியேற்பு நிகழ்வைப் பகிஷ்கரித்திருந்த காரணத்தால் கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுத் தளத்தில் பாதிப்பு ஏற்படக் கூடாது எனக் கருதி இதர கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பை கட்சித் தலைமை பிற்போட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *