அமெரிக்க நீதிமன்றத்தில் கோட்டாவுக்கு எதிராக மேலும் 10 பேர் வழக்கு! – சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டுக்கள்

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக, அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் மேலும் 10 பேர் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன் நேற்று வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான படையினர் மற்றும் பொலிஸார் தமது அரசியல் எதிரிகளை சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படுத்தினர் என்று மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் நேற்று வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில் 6 பேர் தாங்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர் எனவும், பாலியல் தாக்குதல்களுக்குள்ளாக்கப்பட்டனர் எனவும் கூறியுள்ளனர்.

உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தாங்கள் மிக மோசமான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக இவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது ஒரு தனியான சம்பவங்களோ, எங்காவது ஒன்றாக நிகழ்ந்தவையோ அல்ல எனப் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு சட்டவாளர்களில் ஒருவரான, ஸ்கொட் கில்மோர் ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இது நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகும், இதற்கு கோட்டாபய ராஜபக்சவே தலைமை தாங்கியிருந்தார் என்றும் அவர் கூறினார்.

இந்தக் குற்றங்கள் 2008ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றன என்று கூறப்பட்டுள்ளது,

கடத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டு இராணுவ முகாம்களிலும், பொலிஸ் நிலையங்களிலும் ஆண்களும் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க சட்டவாளரான ஜோன் உலி தொலைபேசி அழைப்புக்கோ, மின்னஞ்சல் கேள்விக்கோ உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் கனேடியத் தமிழரான றோய் சமாதானம், கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான மூல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இவர் இலங்கை சென்றிருந்தபோது கைதுசெய்யப்பட்டு சித்தரவதைக்குட்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் நேற்று திருத்தம் செய்யப்பட்டு, அவருடன் மேலும் 8 தமிழர்கள் மற்றும் 2 சிங்களவர்கள் என மொத்தமாக 11 பேர், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

“தனது கட்டுப்பாட்டில் உள்ள படையினரால் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் பெருமளவில் செய்யப்படுகின்றன என்பதை கோட்டாபய ராஜபக்ச அறிந்திருந்தார் அல்லது அறிந்திருக்க வேண்டும்.

இந்த முறைகேடுகளைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர் அவர்களை ஊக்குவித்தார் அல்லது சகித்துக்கொண்டார்.

குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர் நீதிக்குத் தடையாக இருந்தார். மேலும் சாட்சிகளை மரண அச்சுறுத்தல் செய்தார்” என்று இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பின்னர் தென்னாபிரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம், சர்வதேச சட்ட நிறுவனமான Hausfeld உடன் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடவுள்ளார் எனக் கூறப்படும் நிலையில் இந்த வழக்கு அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *