மைத்திரியே ஜனாதிபதி வேட்பாளர்! – சு.கவின் மத்திய செயற்குழு அதிரடி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை அறிவிப்பதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சு.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு (26) கொழும்பில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடனான அரசியல் கூட்டணி, ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில், பொதுஜன முன்னணியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் கலந்துரையாடல்களின் தற்போதையை நிலைமை குறித்து சு.கவின் மத்திய செயற்குழுவுக்கு செயலாளர் தயாசிறி ஜயசேகர தெளிவுபடுத்தினார்.

அத்துடன், குறித்த பேச்சை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்காக மற்றுமொரு குழுவை நியமிக்க வேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, பைசர் முஸ்தப்பா, லசந்த அழகியவண்ண ஆகியோரின் பெயர்கள் புதிய குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

அதன்பின்னர் மரண தண்டனையை அமுல்படுத்தும் விவகாரம் குறித்து தமது சகாக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்தினார்.

அதேவேளை, சு.கவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை பெயரிடுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவரும், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *