அன்று தேவதையாக காட்சியளித்த ’19’ இன்று காட்டேரியாக மாறியது எப்படி? – மைத்திரியிடம் மனோ அணி கேள்வி 

“ஆடத்தெரியாதவன் மேடைக் கோணல் என கதைவிடுப்பதுபோல்தான் தனது இயலாமையை மூடிமறைப்பதற்காக அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் மீது பழிபோடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்து வருகின்றார்.’’

– இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார்.

அரசமைப்பின் 18 மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டங்கள் இல்லாதொழிக்கப்படவேண்டும் என்றும், 19 ஆவது திருத்தச் சட்டம் காரணமாகவே நாட்டில் அரசியல் ஸ்தீரமற்றத்தன்மை உருவாகியுள்ளது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், நாவலப்பிட்டியவில் நேற்று (25) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இவ்விவகாரம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே வேலு குமார் எம்.பி. மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனநாயகத்துக்கு சட்ட ரீதியில் சமாதி கட்டும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் 18ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன்மூலம் இரண்டு தடவைகளே ஜனாதிபதி பதவியை வகிக்கலாம் என்ற நிலைமையை மாற்றியமைத்து, ஆயுள் முழுதும் ஜனாதிபதி கதிரையில் அமர்வதற்கே மஹிந்த திட்டம் தீட்டினார். மறுபுறத்தில் சர்வாதிகார ஆட்சியும், ஜனநாயக அடக்குமுறைகளும் தலைவிரித்தாடின.

அத்துடன், சட்டவாக்கம், நீதி ஆகிய துறைகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் மஹிந்த வைத்திருந்தார். இவற்றை சகித்துக்கொள்ள முடியாததால்தான் அந்த ஆட்சியிலிருந்து தான் வெளியேறினார் என தேர்தல் பரப்புரைகளின்போது மைத்திரிபால கருத்து வெளியிட்டிருந்தார்.

அதுமட்டுமல்ல 19ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார். எனவே, அன்று தேவதையாகத் தெரிந்த 19ஆவது திருத்தச் சட்டம் இன்று ஜனாதிபதியின் விழிகளுக்குக் காட்டேரியாக விளங்குவது ஏன்?

குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு பொதுத்தேர்தல் நடைபெற்று ஒன்றரை வருடத்தில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இருந்தது. எனினும், 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இந்த நிலைமை மாற்றப்பட்டது.

இதன்படி நான்கரை வருடங்கள் முடிவடையும்வரை ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்கமுடியாது.

ஒக்டோபர் மாதம் அரசியல் சூழ்ச்சி ஏற்பட்டபோதுகூட 19 ஆவது திருத்தச் சட்டமே நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாத்தது.

சுயாதீன ஆணைக்குழுக்களும் நிறுவப்பட்டதால் நீதித்துறையும் கம்பீரமாக செயற்படுகின்றது. அரசியல் சூழ்ச்சியின்போது உயர்நீதிமன்றம் துணிகரமாக வழங்கிய தீர்ப்பே இதற்கு சிறந்த சான்றாகும்.

அதேவேளை, ஜனாதிபதி தவறான முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் அதை சட்டரீதியில் சவாலுக்கு உட்படுத்தும் சூழ்நிலையும் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமே கிடைத்தது.

எனவே, குறித்த சட்டத்தில் ஜனநாயகப் பண்புகள் குவிந்து கிடக்கின்றன. ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் திருத்தம் செய்யலாம். மாறாக முழுமையாக இரத்துச் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது திசைமாறி பயணித்துக்கொண்டிருக்கின்றார். அநீதிகளுக்குத் துணைபோகும் வகையிலேயே அவரின் அரசியல் தீர்மானங்கள் அமைந்துள்ளன. தனது இயலாமையை மூடிமறைத்து, குறுக்கு வழியிலேனும் அரசியலில் ஹீரோவாகுவதற்கே 19ஆவது திருத்தம் மீது அவர் பழிபோடுகின்றார்.

தனது பதவி நிலை என்ன? பொதுவெளியில் தான் எதைக் கதைக்க வேண்டும்? என்பவற்றை மறந்து எதை வேண்டுமானாலும் கதைக்கலாம் என்ற நினைப்பிலேயே ஜனாதிபதி உரையாற்றி வருகின்றார். இதனால், நாட்டுக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. எனவே, எஞ்சியுள்ள காலப்பகுதியிலானது நிதானமாகச் செயற்பட்டு, அரசியலிலிருந்து கௌரவமாக விடைபெறுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *