’19’ திருத்தம் நாட்டுக்கு சாபக்கேடு; தெரிவுக்குழுவில் ஆஜராகமாட்டேன்! – ஜனாதிபதி மைத்திரி திட்டவட்டம்

“அரசமைப்பின் 19ஆவது திருத்தம் நாட்டுக்கு ஒரு சாபக்கேடு. இதை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒழித்தால்கூட நல்லதுதான்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

“விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவானது நாடகத்தையே அரங்கேற்றி வருகின்றது. இதற்கான கதை, திரைக்கதை வசனமெல்லாம் அலரிமாளிகையில் இருந்தே எழுதப்படுகின்றது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று காலை ஊடகப் பிரதானிகளுடன் நடத்திய சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெருவிக்கையில்,

’19’ திருத்தத்தை
ஒழிக்கவேண்டும்

நாட்டின் ஸ்திரத்தன்மை இன்மைக்கு 19ஆவது திருத்தச் சட்டமே காரணம். அடுத்ததாக எவர் ஆட்சிக்கு வந்தாலும், 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கினால் மட்டுமே 2020ஆம் ஆண்டு இலங்கைக்கு நன்மையான ஆண்டாக இருக்கும்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தம் நாட்டுக்கு ஒரு சாபக்கேடு. அப்போது அரச சார்பற்ற அமைப்புக்கள் வழங்கிய அழுத்தத்தால் செய்யப்பட்ட அந்தத் திருத்தம் குறித்து ஆராய்ந்து அதைச் செய்ய முன்னின்றவர்கள் அரசமைப்பு நிபுணர்களா என்று பார்க்க வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இதனை ஒழித்தால்கூட நல்லதுதான்.

ஸ்ரீ. சுதந்திரக் கட்சியே
தீர்மானிக்க வேண்டும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தீர்மானிக்கவேண்டும். கட்சி எடுக்கும் தீர்மானத்துக்கு மதிப்பளித்தே நான் செயற்படுவேன்.

சர்வஜன வாக்கெடுப்பு
என்ற செய்தி தவறானது

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு மக்களின் ஆணையைக் கோரி சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என வெளிவந்த செய்தி பொய். இது தவறான செய்தி என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலின்
பின்பே பொதுத்தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு இரண்டு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.

வெளிநாட்டுக்கு நான் விஜயம் செய்யும்போது குறிப்பிட்ட சிறு குழுவையே அழைத்துச் செல்கிறேன். ஆனால், ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுகின்றன.

நான் கடந்த 4 வருடங்களில் 10 இற்கு மேற்பட்ட உறுப்பினர்களை என்னுடன் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றதில்லை. தஜிகிஸ்தானில் நடைபெற்ற மாநாட்டுக்கு 50 பேரை நான் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.

தெரிவுக்குழு முன்
ஆஜராகமாட்டேன்

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவானது நாடகத்தையே அரங்கேற்றி வருகின்றது. இதற்கான கதை, திரைக்கதை வசனமெல்லாம் அலரிமாளிகையில் இருந்தே எழுதப்படுகின்றது.

தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு எனக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு வந்தால்கூட தெரிவுக்குழு முன்னிலையில் நான் ஆஜராக மாட்டேன்.

பாதுகாப்பில் திருப்தி

ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னரான நாட்டின் பாதுகாப்பில் எனக்குத் திருப்தி. தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் நடத்தும் விசாரணைகளிலும் எனக்குத் திருப்தி.

தாக்குதல் சம்பவங்களின் பிரதான சந்தேகநபர் வெளிநாட்டில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார். ஏனையோரில் பலர் மரணித்துவிட்டனர்; சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, இவர்கள் அனைவருடனும் தொடர்பு வைத்திருந்தவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவசரகாலச் சட்டம்
இனிமேல் நீடிக்கப்படாது

நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் இப்போதைக்கு மட்டுமே நீடிக்கப்படும். அடுத்த தடவை அது நீடிக்கப்படாது.

நால்வருக்கு விரைவில்
மரணதண்டனை அமுல்

போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கான தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும். அதற்கான ஆவணத்தில் நான் கைச்சாத்திட்டுள்ளேன்.

அமெரிக்க இராணுவத்துக்கு
இலங்கையில் இடமில்லை

அமெரிக்காவுடனான சோபா மற்றும் எக்சா உடன்படிக்கைகளுக்கும் நான் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளேன். இவை நாட்டுக்கு ஆபத்தானவை.

ரஷ்யாவுடன் பாதுகாப்பு உறவுகளை நிறுத்துமாறு இலங்கையிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. எனினும், அமெரிக்க இராணுவம் இலங்கையில் நிலைகொள்ள நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *