கல்முனையைப் பாதுகாப்பது முஸ்லிம் சமூகத்தின் கடமை! – யஹ்யாகான் வலியுறுத்து

“கல்முனை முஸ்லிம்களின் தலைநகர். அதனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கைவாழ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கவேண்டும். குழுக்களை அமைப்பதால் மட்டும் மக்களின் தேவைகளை நிவர்த்திக்க முடியாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூக சிந்தனையாளருமான ஏ.சி.யஹ்யாகான் ஊடகங்களுக்கு இன்று அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தமிழ்ச் சகோதரர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் அவர்களுக்கான பிரதேச செயலகத்தைப் பெறுவது என்பதைவிட அடையாளமற்று இருந்த சில அரசியல்வாதிகள் தங்களது முகவரிகளைப் புதுப்பிக்கும் நிகழ்வாகும்” எனவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கல்முனை வடக்கு பிரதேசத்துக்கு செயலகம் அவசியம் என்று தமிழ் மக்கள் கருதினால் துறவிகளினதும் அரசியல்வாதிகளினதும் அஜந்தாக்களுக்கு அடிபணிந்துவிடாது சிவில் சமூகத் தலைவர்கள் பேசி சிறந்த முடிவுக்கு வரமுடியும்.

மறுபுறம் கல்முனை விடயத்துக்குத் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுக்கப் பல்வேறு எத்தனிப்புக்கள் எடுக்கப்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் முப்பது வருடங்களாக உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை முன்னிறுத்திப் போராடி வரும் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த மக்களினது பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றுக்கும் என்ன நடந்தது என்று புரியவில்லை. அந்த மக்களின் கோரிக்கையும் சமாந்தரமாக தீர்க்கப்பட வேண்டும்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *