ஒரு இலட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் மிதந்த உலக கிண்ணம்!

உலகக் கிண்ணப் போட்டியை பிரபலப்படுத்த ஐ.சி.சியும் இந்திய கிரிக்கெட் வாரியமும் பிரத்யேகமான பலூனில் கிண்ணத்தை வைத்து அதை விண்வெளிக்கு அனுப்பியது. 

10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது.

இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. அரைஇறுதி ஆட்டங்கள் மும்பை மற்றும் சென்னையில் நடைபெறலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது மும்பை வான்கடே மற்றும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானங்கள் அரைஇறுதிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அரைஇறுதிக்குரிய போட்டியில் இருந்த சென்னை மைதானம் அந்த வாய்ப்பை இழந்திருக்கிறது. அந்த சமயத்தில் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்த மாற்றம் நடந்திருப்பதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையொட்டி கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மற்றும் மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா உள்பட 18 நாடுகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. பல்வேறு நாடுகளில் பயணிக்கும் இந்த உலக கிண்ணம் செப்டம்பர் 4-ஆம் தகதி போட்டியை நடத்தும் இந்தியாவுக்கு மீண்டும் திரும்புகிறது.

உலகக் கிண்ணப் போட்டியை பிரபலப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.)., இந்திய கிரிக்கெட் வாரியமும் வித்தியாசமாக பிரமிக்கதக்க வகையில் ஒரு முயற்சியை எடுத்துள்ளது. அதாவது பிரத்யேகமான பலூனில் கிண்ணத்தை வைத்து அதை விண்வெளிக்கு அனுப்பியது. அது பூமியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் பூமியின் வளிமண்டலத்தின் விளிம்பில் நிலை நிறுத்தப்பட்டது.

அதில் பொருத்தப்பட்டிருந்த விசேஷ கேமரா, பல்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. அந்தரத்தில் மிதந்த உலகக் கோப்பை பிறகு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் அதிகாரபூர்வ விளையாட்டு கிண்ணம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *