வேலைநிறுத்தப் போராட்டங்கள் அதிகரிக்க இடமளிக்கக்கூடாது! – நஸீர் அஹமட் வலியுறுத்து

“அதிகமான அரச அலுவலகர்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை உலக அரங்கில் இடம்பெற்று வருகின்றது. அதன் காரணமாக இங்கு அதிகளவிலான தொழிற்சங்கங்கள் உருவாகியுள்ளன. இவை தத்தமது அங்கத்தவர்கள் சார்ந்த விடயங்களில் ஈடுபாடு கொண்டு செயற்பட்டு வருகின்றமை சிறப்பான அம்சம். எனினும், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதற்காக வேலைநிறுத்தப் போராட்டங்களை உடன் அரங்கேற்றுவது என்பது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை அளிக்கும் அம்சம் ஆகாது. பிரச்சினைகள் எதுவானலும் பேச்சுகள் மூலம் தீர்வுகாண சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்வரவேண்டும். இந்த விடயத்தில் அரசு காத்திரமான வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நைற்றா நிறுவனத்தின் தலைவருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அதிகளவிலான வேலைநிறுத்தப் போராட்டங்கள், மாணவர்கள் போராட்டங்கள், உரிமைப் போராட்டங்கள், ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவை நாட்டில் அடக்குமுறை இல்லை – சர்வாதிகார ஆட்சி இல்லை என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றன.

இந்தநிலையில், மக்களுக்குரிய அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச அலுவலகர்கள் திடீர் திடீரென வேலைநிறுத்தங்களில் குதிப்பது அரசுக்கும் மக்களுக்கும் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன.
இந்நிலை தொடரக்கூடாது. இதற்கான மாற்று முறைமைகளைக் கையாள வேண்டும்.

எந்த விடயமாக இருந்தாலும் பேச்சுக்களை நடத்துவதன் மூலமாக அதற்குத் தீர்வுகளை எட்ட முடியும். இந்த விடயத்தில் அரச தரப்பு தீர்க்கமான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறிப்பாக தற்போது வேலைவாய்ப்புகளைப் பெறுவது குறித்த போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் ஊடாக நான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன்.

நாடு அமைதியான நிலையில் இருந்தால் மட்டுமே இவ்வாறான முயற்சிகள் வெற்றிபெறும் சூழல் உருவாகும். எனவே, வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்க முனையும் முன்னர் திறந்த பேச்சுகள் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வரவேண்டும்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *