ட்ரம்ப் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டங்களால் 30,000 பேருக்கு கொரோனா!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டங்களால் 30,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் இந்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடக்கிறது. ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடன் காரசார விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்றாலும், மக்கள் மத்தியிலேயே இந்த கூட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் நடத்திய 18 பிரச்சார கூட்டங்கள் மூலம் 30,000 பேருக்கு கொரோனா பாதிப்பும், அதில் 700 பேர் தொற்றால் உயிரிழந்திருக்கவும் வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஜூன் 20 முதல் செப்டம்பர் 22 வரை நடத்தப்பட்ட கூட்டங்களை வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பரவுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக ட்ரம்ப் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டங்களில்தான் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜோ பிடன், ’உங்களை பற்றி ட்ரம்ப்புக்கு எந்த கவலையும் இல்லை. அவரது ஆதரவாளர்களை நினைத்து கூட அவர் கவலைப்படுவதில்லை’ என விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *