மாகாண சபைகளை இல்லாது ஒழிப்பது இனவாதிகளுக்குத் தீனிபோடும் செயல்! – நஸீர் கண்டனம்

“இனவாதத்தைக் கக்குவதும் அதற்கிசைவான கருத்துக்களை முன்வைப்பதும் சமீப காலத்தில் உச்சம் பெற்று வருகின்றன. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் மாகாண சபைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை முன்னாள் அமைச்சரும் பொருளாதார நிபுணருமான மிலிந்த மொறகொட முன்வைத்துள்ளார். மிகவும் கண்டிக்கத்தக்க இக்கருத்தானாது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்குச் சமனானது.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சிறுபான்மை மக்களின் உரிமைக்கான போராட்ட அபிலாஷைகளின் பெறுபேறாக மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. இதனை சிறுபான்மை மக்கள் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளாதபோதும் நாட்டின் அரசமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட சட்ட திருத்தமாக இது உருவாக்கப்பட்டமையால் சிறுபான்மை சமூகங்கள் தத்தமது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க இதனைப் பற்றிப் பிடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

எனினும், பல்லாண்டுகளாக இந்த முறைமையினூடாக வழங்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த இடமளிக்கப்படவில்லை.

குறிப்பாக மூன்று விடயங்களை நாம் கருத்தில்கொள்வோமாயின் முதலாவது காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து சொல்லப்பட்ட விடயங்கள் அமுலாக்கம் செய்யப்படமால் மறுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது, அமுல்படுத்தப்படும் செயற்றிட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில் நெருக்கடிகள் நிலவுகின்றன. அடிப்படைச் செலவுகளுக்கான நிதிகள் மற்றும் புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கான நிதிப்பங்களிப்புகள் பெறுவதில் கஷ்டங்கள் எதிர்நோக்கப்படுகின்றன. மூன்றாவது, எந்தவொரு பணியை மேற்கொள்ள மத்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டிய கட்டமைப்புகளே காணப்படுகின்றன.

இத்தகைய இடர்பாடுகளுக்கு மத்தியில் தொடர்ந்து போராடியே நாம் எமது பணிகளை கிழக்கு மாகாண சபையில் முன்னெடுத்து வந்தோம். இந்தநிலையே மாகாண சபை முறைமையில் உள்ளன.

இந்தநிலையில், மாகாண சபை முறைமையை இல்லாது ஒழிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட கருத்துப் பகிர்ந்துள்ளமை அவர் எந்த எண்ணத்தை மனதில்கொண்டு இப்படிச் சொல்ல முற்பட்டுள்ளார் என்பதை சிந்திக் வைக்கின்றது.

தற்போது நாட்டில் நிலவும் முரண்பாட்டு நிலைமைகளில் – இன, மதவாத சக்திகளுக்குத் தீனிபோடும் அம்சமாக இக்கூற்று அமைந்திருக்கின்றது. இவரது இந்தக் கருத்தை வெள்ளையானை கதையாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாகக் கொண்டு வரப்பட்ட இந்த முறைமையை ஆதாரமாகக் கொண்டே நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று ஆட்சிப்பீடமேறும் அரசுகள் உத்தரவாதம் அளித்து வருகின்றன. 13 – 13பிளஸ் என கடந்த காலங்களில் உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டமையை நாம் மறந்துவிட முடி யாது.

இந்த உத்தரவாதங்கள் யாவும் காலகாலத்தில் காற்றில் கலந்துபோன நிலையில் சட்ட ஆதாரமாக இருக்கின்ற 13ஆவது சட்ட திருத்தை முழுமையாக வழிநடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனச் சிறுபான்மை சமூகங்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் மாகாண சபைகளைக் கலைக்க வேண்டும் எனக் கூறுவதும் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அவற்றை தள்ளிப்போகச் செய்திருப்பதும் சிந்திக்க வைக்கின்றது” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *