பருத்தித்துறையில் வஜிர அபேவர்தன! – புதிய கட்டடத்தைத் திறந்துவைத்தார்

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பௌதீகவளப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நிர்வாகக் கட்டடத்தொகுதியை உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன நேற்றுப் புதன்கிழமை பகல் திறந்துவைத்தார்.

நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சரை பிரதேச செயலக நுழைவாயிலில் வைத்து பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி வெற்றிலை கொடுத்து, பொன்னாடை போர்த்து மாலை அணிவித்து வரவேற்றார்.

அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்கள் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலய மாணவர்களின் ‘பாண்ட்’ வாத்தியம் சகிதம் அழைத்துவரப்பட்டனர்.

அவர்கள் கட்டட நுழைவாயிலில் வைத்து பெண் உத்தியோகத்தர்களினால் மங்கள ஆரார்த்தி எடுத்து வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்து கட்டடத்தை அமைச்சர் திறந்துவைத்தார்.

கட்டடத்தின் உள்ளகத்தைச் சுற்றிப் பார்வையிட்ட அமைச்சர், மங்கள விளக்கேற்றல் நிகழ்வில் கலந்துகொண்டார்.

சர்வமதத் தலைவர்களின் ஆசியுரைகளைத் தொடர்ந்து அமைச்சர் வஜிர அபேவர்தன, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் காமினி செனிவிரத்ன, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.சயந்தன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமார், பருத்தித்துறை நகர சபைத் தலைவர் யோ.இருதயராஜா ஆகியோர் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து பருத்தித்துறை பிரதேச செயலரால் விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களின் செயலர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், யாழ்.மாநகர ஆணையாளர் ஆர்.டி.ஜெயசீலன், பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *