மனிதர்கள் சமமே எந்த வேறுபாடும் இல்லை!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று கூறிய நெறிகளில் முன்வரிசையில் நிற்பது இஸ்லாமிய வாழ்வியல். பிறப்பு, மொழி, இனம், நிறம், சாதி என எந்த அடிப்படையிலும் மனிதனை இழிவுபடுத்தாத மார்க்கம் இஸ்லாம். இறுதி வேதத்தின் சத்தியப் பிரகடனங்கள் இவை. “மனிதர்களே, நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்துள்ளோம்.” (குர்ஆன் 49:13) ஆகவே மனித குலம் பிறப்பின் அடிப்படையில் சமம் ஆனதே. எந்த வேறுபாடும் இல்லை.

“மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்தே படைத்த உங்கள் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். அவை இரண்டின் மூலம் உலகில் அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான்.” (குர்ஆன் 4:1)அதாவது, எல்லா மனிதர்களும் ஒரே ஆன்மாவின் வழித்தோன்றல்களே. எனவே சமம் ஆனவர்களே.“நாம் ஆதத்தின் வழித் தோன்றல்களுக்கு (அதாவது மனிதப் படைப்புக்கு) கண்ணியம் அளித்துள்ளோம்.”
(குர்ஆன் 17:70)அற்புதமான திருவசனம் இது. மனிதப் படைப்பை, மனிதப் பிறவியை எந்த அடிப்படையிலும் இறை வேதம் இழிவுபடுத்தவில்லை. “நாம் மனிதப் படைப்புக்குக் கண்ணியம் அளித்துள்ளோம்” என்று படைத்த இறைவனே கூறிய பிறகு அந்தக் கண்ணியத்தைப் பறிக்கும் உரிமையோ, பிறப்பின் அடிப்படையில் இழிவுபடுத்தும் உரிமையோ யாருக்கும் இல்லை.

சரி, பிறப்பின் அடிப்படையிலோ குலம், கோத்திரத்தின் அடிப்படையிலோ இறைவனிடம் யாரேனும் உயர்தகுதியைப் பெற்றுவிட முடியுமா? முடியவே முடியாது.இறைவனிடம் உயர் தகுதியைப் பெறுவதற்கான ஒரே அளவுகோல் பயபக்தி – இறையச்சம் – ஒழுக்கம். இதோ, வேதத்தின் கூற்று இது:“உண்மையில் உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்.” (குர்ஆன் 49:13)“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் உயர் கோட்பாட்டை வெறும் வாயளவில் சொல்லிக்கொண்டிராமல் இன்றளவும் உயிர்த்துடிப்புடன் செயல்படுத்திக் கொண்டிருக்கும் வாழ்வியல் நெறி இஸ்லாம்தான். இதற்குச் சான்று, அதன் வழிபாட்டு முறை. தொழுகை வரிசையில் ஆண்டானுக்கு முதலிடம், அடிமைக்குக் கடைசி இடம் என்றெல்லாம் இல்லை.நாட்டை ஆளும் மன்னராகவே இருந்தாலும் பள்ளிவாசலுக்கு வந்துவிட்டால் எங்கே இடம் கிடைக்கிறதோ அங்கே உட்கார்ந்து தொழுதுகொள்ள வேண்டியதுதான். அவருக்கு முன்வரிசையில் அரண்மனையைத் துப்புரவு செய்யும் ஒரு தொழிலாளி இருந்தாலும் அவனை விரட்டிவிட முடியாது. இறைவனின் முன் அனைவரும் சமம் எனும் சமத்துவக் கொள்கையை இன்றளவும் செயல் படுத்திக் கொண்டிருப்பது இஸ்லாமிய வாழ்வியல் நெறியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *