தீர்வு கிடைக்கவில்லையாயின் இன்று பிற்பகல் 2 இற்கு உலகமே வியக்குகின்ற செய்தியைத் தருவோம்! – கல்முனை போராட்டக்காரர்கள் எச்சரிக்கை

“எமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்கவில்லையாயின் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியைத் தருவோம்.”

– இவ்வாறு கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வைக் குறிக்கோளாகக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றியத் தலைவர் ஸ்ரீ.க.கு.சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை முதல் பிரதேச செயலகத்தின் எதிரில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத் தலைவரும் கல்முனை முருகன் ஆலயப் பிரதம குருவுமான சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை கிறிஸ்தவ போதகர் அருட்தந்தை கிருபைராஜா, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மூன்றாவது நாளாகத் தொடரும் சாகும் வரையிலான போராட்டத்திற்கு மக்களின் ஆதரவும் கூடி வருகின்றது.

போராட்டக்காரர்களுடன் அம்பாறை மாவட்ட அரச அதிபர், மேலதிக அரச அதிபர், கல்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் அதிசயராஜ் மற்றும் பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் நேற்றுக் கலந்துரையாடினார்கள்.

“எமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்கவில்லையாயின் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியைத் தருவோம்” என்று போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *