அம்புலி மாமாகதைகூறி வாயால் வடை சுடுகிறது கூட்டமைப்பு – சபையில் டக்ளஸ் விளாசல்!

” எமது மக்கள் காணாமல் ஆக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போதும், அந்த அவலங்களை அடுத்தவன் வீட்டு பிரச்சினையாக புறந்தள்ளிவிட்டு, அம்புலி மாமா கதைகளும், ஆட்டுக்குட்டி கதைகளும் அளந்து கொண்டிருந்தவர்கள், யுத்தம் முடிந்தவுடன் மட்டும் புற்றீசல்கள் போல் புறப்பட்டு வந்து இன்று வாயால் வடை சுட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”

இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு  கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தேசிய ஒருமைப்பாடு என்பது அதற்கான முயற்சிகள் ஒரு பக்கத்தில் பாரியளவு செலவுகளை மேற்கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், மறுபக்கத்தில் இந்த அரசின் செயற்பாடுகளும், அரச நிறுவனங்களின் செயற்பாடுகளும் தமிழ் பேசுகின்ற மக்கள் மத்தியில் உணர்வு ரீதியிலானதும், உரிமை ரீதியிலானதுமான வெறுப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தேசிய ஒருமைப்பாடு என்பது ஒரு பேசு பொருளாக மட்டுமே வெறுமனே உதட்டளவிலான உச்சரிப்பாகவே தொடரும் நிலைமையைக் காண்கின்றோம்.

அமைச்சர்  ஏற்கனவே அரச படிவங்களை தமிழ் மொழியிலே மொழிபெயர்க்கின்ற ஒரு பணியை மேற்கொண்டதாகத் தெரிவித்திருந்தார். அதற்குரிய அலுவலர்களும் நியமிக்கப்படுவார்கள் எனக் கூறியிருந்தார். என்றாலும், பெரும்பாலான அரச நிறுவனங்களில் அப்படியான செயற்பாடுகளை நடைமுறையில் இன்னமும் காணக் கூடியதாக இல்லை.

எனவே, தேசிய நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு எனக் கதைக்கின்றபோது, இரு மொழி அமுலாக்கல் என்பது அதனது அடிப்படையாக இருப்பதை அவதானத்தில் கொண்டு, இந்தச் செயற்பாடுகளை மேற்கொள்வதோடு, பொதுவாக அரச பணியாளர்களிடையே இந்த இரு மொழிக் கொள்கை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து ஒரு பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும். அதனை ஒரு தவிர்க்க முடியாத தொழில் ரீதியிலான ஒழுங்கு ஏற்பாடாகவும் மேற்கொள்ளல் வேண்டும்.

வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலான அலுவலகமானது தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்ற போதிலும், இந்த அலுவலகம் தொடர்பில் வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டோரது உறவினர்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளத்தக்க வாய்ப்புகள் இன்னும் ஏற்படாதுள்ளமையை நாம் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றோம்.

அடுத்ததாக, வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டவர்களது உறவினர்கள் மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாவினைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த இரண்டு வருடங்களாக போராடி வரவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

இந்த உறவுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்பதில் எமக்கு எவ்விதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை. ஆனால், அந்த இழப்பீட்டுத் தொகையானது, அவர்களது இழப்புகளை முழுமையாக ஈடுசெய்யப் போவதில்லை.

என்றாலும், அவர்களது பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு, போதியளவு ஒரு தொகை இழப்பீட்டுத் தொகையாக – கௌரவமான முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்

ஆனால், அதற்கு முன்பதாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதில் நாம் தொடர்ந்தும் உறுதியாகவே இருக்கின்றோம்.

கடந்த காலங்களில் வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.

அந்த ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் பல பகிரங்கமான காட்சிப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, பரபரப்பினை இந்த நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியிருந்தன. அதன்போது பல்வேறு தரப்பினர்மீது வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், உண்மைகள் கண்டறியப்படாவிட்டால், முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட அந்த அனைத்துத் தரப்புகளும் இதில் ஈடுபட்டிருக்கின்றன என்ற சந்தேகமே எமது மக்கள் மத்தியில் இருந்து வரும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, உண்மைகள் கண்டறியப்பட்டால், இந்த வீணான சந்தேகங்கள் எமது மக்கள் மத்தியில் நிலவுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்பதுடன், மீளவும் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதை தடுக்கவும் முடியும்.

இந்த நாட்டின் வரலாற்றை திரும்பிப் பார்க்கின்றபோது, ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் மாத்திரம் வலிந்து காணாமற் போகச் செய்யப்படவில்லை. சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் கூட இந்த நிலைமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்

தற்போது வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற 11 மாணவர்கள் – இளைஞர்கள் கடத்தல் மற்றும் வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டமை தொடர்பான சம்பவத்தை எடுத்துக் கொண்டால், அதில் மூவினங்களைச் சேர்ந்த இளைஞர்களும் வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டுள்ளனர்.

வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டவர்களது உறவினர்களது அபிலாசைகளை நிறைவேற்ற இயலாத வகையில் அலுவலகங்களை அமைத்துக் கொண்டு, அதற்கென எமது மக்கள் பணத்தினை செலவு செய்வதில் எவ்விதமான பயனும் இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.

வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டவர்களது உறவினர்கள் அண்மையில் தங்களது போராட்டத்தின் இரண்டாண்டு நினைவையொட்டி கிளிநொச்சியில் ஒரு கவனயீர்ப்பு போராட்டப் பேரணியை ஆரம்பித்து, இந்த காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் வேண்டாம் எனக் கூறி,

அதற்கான எதிர்ப்பினை தெரிவித்திருந்த சமயத்தில், போலி தமிழ்த் தேசியம் பேசுகின்ற ஓர் அரசியல்வாதியின் ஏற்பாட்டில் சிலர் அந்தப் பேரணிக்குள் பலவந்தமாகப் புகுந்து, ‘வேண்டும். வேண்டும். இந்த அலுவலகம் வேண்டும்!’ என எமது மக்களது அபிலாசைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்த ஒரு சம்பவமும் இடம்பெற்றிருந்தது.

இவ்வாறு, எமது மக்களுக்கு எதிரான ஒரு செயற்பாட்டை மேற்கொண்டு, வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்ட உறவுகளது உணர்வுகளை ஒடுக்கும் முகமாக செயற்பட்டிருந்த அந்த தமிழ் அரசியல்வாதிக்கு இந்த அலுவலகம் ஏதேனும் நிதி ஒதுக்கீடுகளை கொடுத்ததா? என்பது தெரியாது. ஆனால், அவர் அவ்வாறு செயற்பட்டதைப் பார்க்கின்றபோது, எமது மக்களிடையே அவ்வாறானதொரு சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, எமது மக்களிடையே இத்தகைய கேவலமான செயற்பாடுகளின் மூலமாக இந்த அலுவலகத்தை திணிக்க முற்படாமல், அதனுடைய செயற்பாடுகளின் மூலமாக – எமது மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதன் ஊடாக எமது மக்களின் நம்பிக்கையை அதன்பால் ஈரத்துக் கொள்ள முற்பட வேண்டும் என்பதையே இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்தும் போராட்டம் நியாயமானது. அவர்களது போராட்டத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதே சிலரது விருப்பமாக இருக்கலாம்

ஆனாலும் அவர்களுக்கு நீதி வேண்டும் என்பது மட்டுமே எமது நிலைப்பாடு. எமது மக்கள் காணாமல் ஆக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போதும், அந்த அவலங்களை அடுத்தவன் வீட்டு பிரச்சினையாக புறந்தள்ளிவிட்டு, அம்புலி மாமா கதைகளும், ஆட்டுக்குட்டி கதைகளும் அளந்து கொண்டிருந்தவர்கள், யுத்தம் முடிந்தவுடன் மட்டும் புற்றீசல்கள் போல் புறப்பட்டு வந்து இன்று வாயால் வடை சுட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அவர்களது உறவுகள் இந்த மண்ணில் இன்னமும் நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், முதன் முதலில் இந்த மண்ணில் எமது மக்களுக்கு நீதி கேட்டு போராடும் துணிச்சலை வளர்த்தவர்கள் நாங்கள்.

1995 இல் யாழில் நடந்த சூரியக்கதிர் படை நடவடிக்கையின் போது பலநூறு பேர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்கள். அப்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை திரட்டி காணாமல் போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் அமைத்து தொடர் போராட்டங்களை நடத்தியவர்கள் நாங்கள்.

அது மட்டுமன்றி நாடாளுமன்றத்திலும் அதற்கெதிரான குரல்களை எழுப்பியவர்கள் நாங்கள். அதன் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் நாங்கள். சர்வதேசத்தின் மத்தியிலும் அம்பலப்படுத்தியவர்கள் நாங்கள். அத்தகைய எமது போராட்டங்களின் மூலம் அன்று காணாமல் போதல் மற்றும்  கைதுகளை முடிந்தளவு நாம் கட்டுப்படுத்தியிருந்தோம்.

அப்போதே அந்த போராட்டங்களுக்கு சக கட்சி தலைமைகளும் வலுச்சேர்த்திருந்தால், நீதி கூட  கிடைத்திருக்கும். அது மட்டுமன்றி இன்று நடக்கும் காணாமல் போன உறவுகளுக்கான போராட்டங்களுக்கும் இதுவரை நீதி கிடைத்திருக்கும்.

அன்று நாம் நடத்திய போராட்டங்களுக்கு வலுச்சேர்ப்பதற்கு மாறாக தமது அரசியல் ஆதாயங்களுக்காக அதை திசை திருப்பி சென்றவர்களே, இன்று வந்து நெருப்புக்கண்ணீர் விடும் எமது மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வடக்கில், யாழ் கிருசாந்தி, புங்குடுதீவு சாரதாம்பாள், மற்றும் கிழக்கில் கோணேஸ்வரி என தொடர்ந்து பாலியல் வன்புணர்வுகளும் படுகொலைகளும் நடந்தேறிய போது, அவைகளுக்கு எதிராக இந்த நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி அவைகளை அம்பலப்படுத்தியவர்கள் நாங்கள். தொடர் பாலியல் வல்லுறவு படுகொலைகளை தடுத்து நிறுத்தியவர்கள் நாங்கள்.

இவைகளுக்கு எதிராக நாம் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த போது, தவிர்க்க முடியாமல் பங்கிற்கு தாமும் குரல் கொடுப்பதுபோல் இந்த சபையில் குரல் எழுப்பியவர்கள், தமது உரை முடிந்ததுதும், எந்த படையினரை சுட்டிக்காட்டி தமது உரையை நடத்தினார்களோ, அதே படைகளை வழிநடத்தும் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களுடன்  நாடாளுமன்ற உணவு விடுதியில் கைகுலுக்கி, தாம் ஆற்றிய உரைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட வெட்கம்  கெட்ட அரசியல் பிழைப்புகளையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அவர்கள் இன்றும் இந்த சபையில் சாத்தான்கள் போல் வேதம் ஓதிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். காணாமல் போதல்களுக்கு காரணமானவர்களை சுட்டிக்காட்டுவதற்கு மாறாக, தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் காரணமாக அடுத்தவர்கள் மீது தொடர்ந்தும் பழிகளை சுமத்தி வந்ததாலுமே, எமது மண்ணில் உண்மையாகவே காணாமல் ஆக்கியவர்கள் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.  காணாமல் போதல்கள் நீடித்த துயர்களாகவும் இருந்து வந்திருக்கிறது.

கடந்த கால யுத்த சூழலை முன்வைத்து இந்த நாட்டில் இடம்பெற்றிருந்த தனிநபர் கொலைகள் தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *