இராணுவத் தளபதியாகிறார் போர்க்குற்றவாளி சவேந்திர!

வன்னியில் இறுதிப்போரின்போது போர்க்குற்றங்களைப் புரிந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டு சர்வதேச சமூகத்தின் கடும் விசனங்களுக்குள்ளாகியிருந்த இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் சேவைக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார் என அறியமுடிகின்றது.

இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி 55 வயதுடன் நிறைவடையவிருந்த சவேந்திர சில்வாவின் சேவைக்காலத்தை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார் ஜனாதிபதி.

எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி தற்போதைய இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் அதன்பின்னர் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளது எனத் தெரியவருகின்றது.

அடுத்த இராணுவத் தளபதி பதவிக்குப் பொறுத்தமானவராக மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே இருக்கின்றார் என இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், நவம்பர் 14ஆம் திகதி அவருக்கு 55 வயது பூர்த்தியாகின்றது. குறித்த அதிகாரிக்கு பதவி நீடிப்பை ஜனாதிபதி வழங்கவில்லையெனில், அவர் ஓய்வுபெற வேண்டிய நிலை ஏற்படும்.

அடுத்த இராணுவத் தளபதி பதவிக்கு சத்யப்பிரிய மற்றும் சவேந்திர சில்வா ஆகியோருக்கிடையே பனிப்போர் நிலவுகின்றது எனக் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தின்படி சவேந்திர சில்வாவுக்கே அடுத்த இராணுவத் தளபதி பதவி வழங்கப்படும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *