நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை உடன் நடத்த நடவடிக்கை எடுக்கவும்! – நஸீர் வலியுறுத்து

“நாட்டில் தற்போது தொடர்ந்து பெருகும் முரண்பாடுகளைக் களையவும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையை நீக்கவும் உடனே நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனையே முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரித்துள்ளார். அவரது அக்கருத்தை நான் பத்திரிகையில் பார்த்தேன். அவரது இக்கருத்தை நான் நூற்றுக்கு நூறு வீதம் ஆமோதிக்கின்றேன். அத்தோடு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடமும் இந்தக் கோரிக்கை முன்வைக்கின்றேன்.”

– இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நாட்டில் தற்போது தோன்றியுள்ள விடயங்களுக்குத் தீர்வுகாண மக்கள் அரங்குக்குச் செல்வதே முக்கியமானதாகும். எனவே, அரசு நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அதற்கும் முடியாவிட்டால். விகிதசாரத் தேர்தல் முறைமையின்படி மாகாண சபைத் தேர்தலையாவது நடத்தி மக்களின் கருத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றைத் தாக்கல் செய்து நிறைவேற்றுவதன் மூலமாக இரண்டு வாரங்களில் தேர்தலுக்குச் செல்ல முடியும். இன்று நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஜனநாயக முறைமையிலான மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு தேர்தல்கள் காலதாமதப்படுத்தப்படுவதாகும்.

இன்று நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பங்குச் சந்தை பாரிய பின்னடைவைக் கண்டு வருகின்றது. இந்தநிலை தொடருமானால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க நேரும் இந்தநிலையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டு மாற்றி அமைக்கவேண்டும்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *