தமிழர்களை இனியும் ஏமாற்றாது வாக்குறுதிகளை நிறைவேற்றுக! – ரணிலிடம் சம்பந்தன் நேரில் வலியுறுத்து

 

“கொடூர போரால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அபிவிருத்தியையும், அரசியல் தீர்வையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். இந்த இரண்டு கருமங்களும் தடங்கலின்றி நிறைவேற வேண்டும். தமிழர்களை அரசு இனிமேலும் ஏமாற்றக்கூடாது. வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்ற வேண்டும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் விசேட அபிவிருத்தித் திட்டமான பனை நிதியத்தின் ஆரம்ப நிகழ்வு அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

“அரசு வாக்குறுதியளித்ததன் பிரகாரம் அபிவிருத்தியும் அரசியல் தீர்வும் சமநிலையில் செல்ல வேண்டும். அபிவிருத்தியைக் காட்டித் தீர்வைப் பின்தள்ள முயற்சிக்கக் கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும்போது தெரிவித்ததாவது:-

“போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்காகப் ‘பனை நிதியம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமகால அரசு நாட்டின் அபிவிருத்தியைக் கருத்தில்கொண்டு மிகுந்த பொறுப்புடன் செயற்படுகின்றது.

வரவு – செலவுத் திட்டத்தில் பனை நிதியத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக உரிய வகையில் செலவு செய்யப்படும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கமைவாக இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான நிதியை வரவு – செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

அபிவிருத்திக்குத் தேவையான நிதியை இந்த நிதியத்தினூடாக வழங்குவதற்கு உரிமை இருக்கின்றது. இந்த நிதியத்தின் மூலம் வடக்கு, கிழக்கில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட அபிவிருத்தி செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தந்த மாகாணங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்காகத் தத்தமது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும்போது அவற்றுக்கு அமைவாக அதற்கான நிதியை இந்த நிதியத்தின் ஊடாக வழங்க முடியும்.

இந்த நிதியத்துக்கு மேலதிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக கம்பெரலிய வேலைத் திட்டத்தின் கீழும் நிதியை நாம் வழங்குவோம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உத்தேசிக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தின் கீழ் சேதமடைந்த வீடுகளின் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதேபோன்று என்டர் பிரைஸ் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழும் நிதி வழங்கப்படும்.

22,000 பட்டதாரிகளுக்கு
விரைவில் நியமனங்கள்

எமது அரசின் கீழ் 22 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதி வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சால் ஆள்களை இணைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்குத் தேவையான நடவடிக்கைகளை நாம் உரிய வகையில் மேற்கொண்டுள்ளோம். இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக நிதி அமைச்சு வழங்கும் ஊக்குவிப்பு நிதி தொடர்பாக அமைச்சர் விரைவில் அறிவிக்கவுள்ளார்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *