சாக்குப்போக்குச் சொல்லாமல் அரசியல் கைதிகளை உடன் விடுவியுங்கள்! – மைத்திரிக்கு சம்பந்தன் பதிலடி

“தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருப்பது நியாயமற்றது – மனிதாபிமானமற்றது. மன்னிப்பின் அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும். செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து முடிக்காமல் சாக்குப்போக்குச் சொல்லி அரசியல் கைதிகளை விடுதலை விவகாரத்தை இழுத்தடிக்க வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் அரசிடமும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

‘அரசியல் கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள். நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்குத் தற்போது மன்னிப்பு வழங்குவது கடினம். இவர்களில் பெரிய குற்றங்களைப் புரிந்தவர்களை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்கவும் முடியாது. ஞானசார தேரருடன் அரசியல் கைதிகளை ஒப்பிட வேண்டாம். இவர் செய்த குற்றம் வேறு. அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றம் வேறு. அவர்களை வைத்து எவரும் அரசியல் செய்ய வேண்டாம்’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ‘புதுச்சுடர்’ செய்திச் சேவை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசியல் கைதிகளின் விடயம் சட்ட ரீதியாக மாத்திரம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல எனவும், இது தமிழ்த் தேசியப் பிரச்சினையுடன் தொடர்புடைய விடயம் எனவும், ஆதலால் இது அரசியல் ரீதியாக எதிர்நோக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரிடம் நாம் நடத்திய சந்திப்புகளில் தெளிவாக எடுத்துரைத்திருந்தோம்.

அன்று அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பலர் மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள். அதேவேளை, இறுதிப்போரின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் 12 ஆயிரம் போராளிகளுக்குப் புனர்வாழ்வு வழங்கி அவர்களை மஹிந்த அரசு விடுவித்திருந்தது. ஆகையால், அரசியல் கைதிகளைத் தொடர்ந்து சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருப்பது நியாயமற்றது – மனிதாபிமானமற்றது. அவர்களும் மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும்.

அரசியல் கைதிகள் அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால், அவர்களில் பலருக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலமே அவர்களுக்கு எதிரான சாட்சியமாக இருக்கின்றது என்பதை ஜனாதிபதி உணர்ந்துகொள்ள வேண்டும்.

செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து முடிக்காமல் சாக்குப்போக்குச் சொல்லி அரசியல் கைதிகளை விடுதலை விவகாரத்தை இழுத்தடிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடமும் அரசிடமும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *