திங்கட்கிழமை விஷ வாயுத் தாக்குதல் நடக்கலாம் எனக் கூறுகிறார் மஹிந்த!

“எதிர்வரும் திங்கட்கிழமை தாக்குதல் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை சொல்கின்றது. மறுபக்கம் விஷ வாயுத் தாக்குதல் நடக்கலாம் என்று ஒரு தகவல் நேற்று உலாவியது. உண்மையில் என்னதான் நடக்கின்றது?”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“திங்கட்கிழமை தரம் 1 முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கு பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன என அரசு அறிவித்துள்ளது. ஆனால், அன்று தாக்குதல்கள் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை சொல்கின்றது. நான்கு மில்லியன் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமை.

ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு உண்மைகளை வெளியே சொல்லாமல் விதிக்கப்படும் தடையாகும். ஒரு பக்கம் பாதுகாப்பு ஏற்பாடு என்றாலும் மறுபக்கம் மக்கள் அரசை நம்பாத நிலை உள்ளது.

இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்தும் பாதுகாப்புத் தரப்புக்கு அரசியல் தலையீடுகள் எதுவும் இருக்கக் கூடாது.குற்றம் செய்தவர்கள் கட்டாயம் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

சிறுவர்களுக்கான பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அரசு ஒரே குரலில் சொல்ல வேண்டும். 19ஆவது திருத்தத்துக்குப் பின்னர் இப்போது இரு பிரிவுகளாகச் செயற்படும் அரசியல் தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இருந்து உண்மையைச் சொல்ல வேண்டும்.

எதிர்வரும் திங்கட்கிழமை தாக்குதல் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை சொல்கின்றது மறுபக்கம் விஷ வாயுத் தாக்குதல் நடக்கலாம் என ஒரு தகவல் நேற்று உலாவியது.உண்மையில் என்னதான் நடக்கின்றது?

தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள போதிலும் பிள்ளைகளை இன்னமும் பெற்றோர் அனுப்பாமல் இருப்பது அரசின் மீதான சந்தேகமே காரணம். மத்திய வங்கி மீதான தாக்குதல் மற்றும் விமான நிலையத் தாக்குதல்களின்போதுகூட மக்கள் இப்படி சந்தேகம் கொண்டிருக்கவில்லை.

நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனைக் கட்டியெழுப்ப வேண்டும். நாட்டின் இந்தத் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று முஸ்லிம்களும் விரும்புகின்றனர். அதனை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *