ஹிஸ்புல்லாவை பதவி நீக்கக் கோரி முற்றாக முடங்கியது திருமலை மாவட்டம்!

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை நீக்கக் கோரி திருகோணமலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் போராட்டத்தால் மாவட்டம் ஸ்தம்பிதமடைந்தது.

ஹர்த்தால் போராட்டத்தால் திருகோணமலை நகரம், சேருநுவர, கந்தளாய், தம்பலகாமம் ஆகிய பகுதிகள் முற்றாக முடங்கின.

அங்கொட பஸ் சாலைக்குச் சொந்தமான இ.போ.ச. பஸ் ஒன்று சேவையில் ஈடுபட்டிருந்தபோது, கல் வீச்சுக்கு உள்ளாகியுள்ளது. திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் 5ஆவது மைல் கல்லுக்கு அண்மையில் பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதேவேளை, வீதிப் போக்குவரத்துக்களை முடக்கி உப்புவெளியில் வீதியின் நடுவில் ரயர்கள் போட்டு எரிக்கப்பட்டன. பொலிஸார் அவற்றை அகற்றினர்.

பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவு மிகக்குறைவாக இருந்தது. அரச திணைக்களங்கள், வங்கிகள் திறந்திருந்தன. எனினும், ஊழியர்களின் வரவு குறைவாகவே இருந்தது.

அதேவேளை, அரச நிறுவனங்கள், வங்கிகளுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, ஹிஸ்புல்லாவை கிழக்கு ஆளுநர் பதவியிலிருந்து நீக்கக் கோரி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த அணியின் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் விஜய விக்கிரம லமஹேவாவின் போராட்டம் தொடர்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *