சஹ்ரான் குழுவினரே வவுணதீவில் 2 பொலிஸாரை சுட்டுக்கொன்றனர்! – விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் வழிநடத்தலில் இயங்கும் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி இலங்கையில் முதலாவது தாக்குதலை நடத்தியுள்ளது எனப் பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளின்போது கண்டறிந்துள்ளனர்.

இந்தத் தகவலைச் சுட்டிக்காட்டி கொழும்பு சிங்கள ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீமினின் வாகன சாரதி எனக் கூறப்படும் நபர் விசாரணைகளின்போது இந்தத் தகவலை வழங்கியுள்ளார்.

சஹ்ரான் ஹாசீமின் சாரதியான மட்டக்களப்பு, காத்தான்குடி – 3, மீன் சந்தை வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய முகமது சரீப் ஆதம்லெப்பை கபூர், கைத்துப்பாக்கி மற்றும் மடிக்கணினியுடன் நேற்றுமுன்தினம் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டார்.

காத்தான்குடியில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட இவரிடம் நடத்திய விசாரணைகளின்போது கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் காவலரணில் இருந்த தமிழ் மற்றும் சிங்களப் பொலிஸார் இருவரை சஹ்ரான் ஹாசீமின் குழுவினரே வெட்டியும் சுட்டும் கொலைசெய்தனர் எனவும், இந்தக் கொலையுடன் தானும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு நடத்திய முதலாவது தாக்குதல் இது எனவும் இவர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சஹ்ரான் ஹாசீமின் சாரதியிடம் தொடர்ந்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை, வவுணதீவில் பொலிஸார் இருவரினதும் கொலைகளுக்கு ரி – 56 ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் அன்று சந்தேகம் வெளியிட்டிருந்தனர். சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் இரண்டு துப்பாக்கிகளும் காணாமற்போயிருந்தன. அவை இரண்டும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தச் சம்பவத்தையடுத்து விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலரைத்தான் சந்தேகத்தில் பொலிஸார் கைதுசெய்திருந்தனர். இந்தக் கைதுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் கடும் கண்டனங்களை நாடாளுமன்றில் தெரிவித்திருந்தனர்.

தற்போதுதான் இந்தச் சம்பவத்துடன் சஹ்ரான் ஹாசீமின் குழுவினரே தொடர்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *