பள்ளியில் 46 வாள்கள் மீட்பு: ஐ.தே.க. உறுப்பினர் கைது!

கொழும்பு, கொம்பனி வீதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் ஒன்றிலிருந்து நேற்று 46 வாள்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த பள்ளிவாசலில் பொலிஸார் நடத்திய விசேட தேடுதலின்போது மௌலவி அறையின் கட்டிலின் கீழ் இருந்து இவை மீட்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் குறித்த பள்ளிவாசலின் மௌலவி கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது அவரிடமிருந்து 15 கத்திகளும், இராணுவச் சீருடைக்கு இணையான 25 சீருடைகளும் மீட்கப்பட்டன.

மௌலவியைத் தடுத்துவைத்துள்ள பொலிஸார், அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர் எனவும், சீனாவில் இருந்து இந்த வாள்களை அவர் இறக்குமதி செய்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவருக்கு சீனாவில் இருந்து 300 வாள்களை இறக்குமதி செய்யப் பணம் வழங்கப்பட்டிருந்தது எனவும், இதற்கான பணத்தை மாவனெல்லைப் பிரதேசத்தில் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இப்ராஹிம் மௌலவி என்பவரின் மகன் வழங்கியுள்ளார் எனவும் அறியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *