ஜெனிவாத் தொடரில் அரசுக்குத் தலையிடி! – காணாமல் ஆக்கப்பட்டோருக்காக 16, 19களில் வடக்கு, கிழக்கில் போராட்டங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்ம் சபையின் 40ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேசத்திடம் நீதி வேண்டி எதிர்வரும் 16, 17ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழ். பல்கலைக்கழக
மாணவர்களின் பேரணி

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 16ஆம் திகதி மக்கள் எழுச்சிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த எழுச்சிப் போராட்டப் பேரணிக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் ஒன்றுதிரளுமாறும் மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

“ஈழத் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் என்பவை இலங்கையில் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத்தீவில் திட்டமிடப்பட்ட ரீதியிலான தமிழ் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பாகவே உள்ளன.

அத்தகைய இனச்சுத்திகரிப்பின் உச்சமே இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு, போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமைகள் சட்ட மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள்களாகும். அவற்றுக்குரிய பரிகார நீதியை சர்வதேசம் தமிழ் மக்களுக்குப் பெற்றுத்தர நாம் விழிப்போடு மக்கள் எழுச்சிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் 2015இல் முன்மொழியப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக்கு ஊடான உள்ளகப் பொறிமுறைகளையே இலங்கை அரசு நிறைவேற்றத் தவறிய நிலையிலும், ஏற்கனவே கால அவகாசங்கள் வழங்கப்பட்ட நிலையிலும் மீண்டும் கால அவகாசமே வழங்கப்படவுள்ளது. இதனை வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி இந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்” – என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலும்
கவனயீர்ப்புப் பேரணிகளும்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 19ஆம் திகதி ஹர்த்தால் போராட்டமும், கவனயீர்ப்புப் பேரணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிவித்துள்ளனர்.

ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி கவனயீர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொள்ளுமாறு வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பல்கலைக்கழக சமூகத்தினர், தொழில்நுட்பக் கல்லூரி சமூகத்தினர், ஆசிரிய பயிற்சிக் கல்லூரி சமூகத்தினர், ஆசிரியர் சங்கங்கள், பாடசாலை மாணவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடக சங்கங்கள், சமயத் தலைவர்கள், இளைஞர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், வர்த்தகர் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வர்த்தகர் சங்கத்தினர் வடக்கு, கிழக்கில் தமது வர்த்தக நிலையங்களை மூடியும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சங்கத்தினர் தமது போக்குவரத்துச் சேவைகளை நிறுத்தியும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் தமது அரசியல் வேறுபாடுகளைக் களைந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மூவின மக்களும் தமது நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *