என்னதான் ஆட்டம் போட்டாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! – மைத்திரிக்கு ரணில் தக்க பதிலடி

“ஐக்கிய தேசிய முன்னணி அரசை எவராலும் இனிமேல் கவிழ்க்கவே முடியாது. ‘2018 ஒக்டோபர் 26’ போல் அரசியல் சூழ்ச்சிக்கு மீண்டும் எத்தனிப்பவர்கள் என்னதான் ஆட்டம் போட்டாலும் இறுதியில் மூக்குடைபட்டே போவார்கள். எங்கள் அரசு தலைநிமிர்ந்தே நிற்கும். இந்த அரசு ஒருபோதும் கவிழாது.”

– இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பகுதி உறுப்பினர்களை இணைத்து, 113 உறுப்பினர்களின் பெரும்பான்மைப் பலத்துடன் எதிர்வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, தற்போதைய அரசைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்தநிலையில், சர்வதேச செய்திச் சேவை ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்தபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஐக்கிய தேசிய முன்னணி அரசில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல பங்காளிக் கட்சிகள் உள்ளன. அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் எனது தலைமையில் கீழ் ஒற்றுமையுடன் ஓரணியில் செயற்படுகின்றனர். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிரணி வரிசையில் அமர்ந்துகொண்டாலும் தமிழ் மக்களின் நலன் கருதி எமது அரசுக்கு பூரண ஆதரவை வழங்கி வருகின்றார்கள்.

இந்த ஒற்றுமை ‘2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ நடந்தது முதல் தொடர்கின்றது. இதனால்தான் அந்த அரசியல் சூழ்ச்சியை வெறும் 51 நாட்களில் முறியடித்தோம். இனிமேலும் அரசியல் சூழ்ச்சிக்கு இடமளிக்க மாட்டோம். இந்த அரசை எவராலும் கவிழ்க்கவே முடியாது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *