பாரிய தீ விபத்தால் பற்றி எரியும் பிரான்ஸின் வரலாற்றுச் சின்னம்! – சோகத்தில் அந்நாட்டு மக்கள்

பிரான்சில் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர், பாரிஸில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரடேம் கதீட்ரல். பாரம்பரிய சின்னமாகத் திகழும் இந்தத் தேவாலயத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தால் தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமிக்கத் தொடங்கியது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஐரோப்பியர்களின் கட்டடக் கலைக்கு உதாரணமாகத் திகழ்ந்துவந்த இந்தப் பழமையான தேவாலயம் தீக்கிரையானது அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் புனரமைத்தல் பணிகள் தொடங்கியிருந்த இந்தத் தேவாலயத்தில் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 6 மில்லியன் யூரோ செலவில் இந்தத் தேவாலயத்தின் சிகரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது.

கதீட்ரல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் குறித்தோ, தீயில் சிக்கி யாரேனும் தவிக்கிறார்களா என்பது குறித்தோ இதுவரையில் விவரங்கள் வெளியாகவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இந்தத் தீ விபத்து பார்ப்பதற்கே அச்சமூட்டுவதாக இருக்கின்றது. விரைந்து செயற்பட்டு ஹெலிகொப்டர் மூலமாக அதை அணைக்க முயற்சி செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *