பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய அளவுக்கு ஆனோல்ட், சயந்தனுக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லையாம்!

யாழ்ப்பாணம் மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை எனப் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது என அறியவந்தது.

தம்முடன் யாழ்ப்பாணம் மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோரின் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் இருவருக்கும் போதியளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பொலிஸ் மாஅதிபரைக் கடிதம் மூலம் கோரியிருந்தார்.

அக்கடிதத்தில் உள்ள விடயங்க மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள புலனாய்வுப் பிரிவுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன எனத் தெரிகின்றது. அவை தொடர்பில் ஆராயப்பட்டன.

சம்பந்தப்பட்டோருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள், அவை தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் வழங்கப்பட்ட முறைப்பாடுகள், அவர்களின் நடவடிக்கைகள் ஆகியன தொடர்பில் ஆராயப்பட்டன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்திலும் விசாரிப்புகள் இடம்பெற்றன எனவும் அறியவந்தது.

இந்தநிலையில், பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டிய பாராதூரமான அச்சுறுத்தல்கள் யாழ்ப்பாணம் மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கு இல்லை எனப் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது என நம்பகமாக அறியவந்தது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்துக்குப் போதிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது குடும்பம் வசிக்கும் இல்லத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கடந்த ஆண்டு அவரால் விண்ணப்பிக்கப்பட்டிருநதது என்றும் கூறப்பட்டது. எனினும், அவரது கிளிநொச்சி அலுவலகத்துக்கு ஏற்கனவே 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையால் அந்த விண்ணப்பத்தில் கோரப்பட்ட மேலதிக பாதுகாப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோரால் பொலிஸ் பாதுகாப்புக் கோரப்பட்டு முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்களும் பாதுகாப்பு அமைச்சால் கடந்த ஆண்டில் நிராகரிக்கப்பட்டன என்றும் கூறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *