வடக்கு மாகாணத்தில் வதைக்கின்றது வறட்சி! – 33,500 பேர் பாதிப்பு

நாட்டில் தற்போது கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் நிலையில் வடக்கு மாகாணத்தில் 10 ஆயிரத்து 110 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 593 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் யாழ்ப்பாண மாவட்டமே அதிகளவு பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, மருதங்கேணி, காரைநகர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே வறட்சியால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவில் ஆயிரத்து 31 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 71 பேரும், வேலணையில் 2 ஆயிரத்து 798 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 642 பேரும், ஊர்காவற்றுறையில் 2 ஆயிரத்து 422 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 848 பேரும், மருதங்கேணியில் ஆயிரத்து 60 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 630 பேரும், காரைநகரில் 2 ஆயிரத்து 760 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 297 பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்தப் பிரதேச மக்கள் குடி தண்ணீருக்கும், வேறு தேவைகளுக்கான தண்ணீருக்காகவும் நீண்ட தூரம் அலைய வேண்டியுள்ளது. வேலணைப் பிரதேசத்தில் குடி தண்ணீர் பெறுவது முடியாத காரியமாகவே உள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

வவுனியாவில் கடந்த மாத இறுதியில் வறட்சியால் 39 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்திருந்திருந்தது.

இந்த மாதம் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான விவரங்களை இடர்முகாமைத்துவப் பிரிவு வெளியிடவில்லை. மன்னார், முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் பாதிப்பு விவரங்களும் வழங்கப்படவில்லை.

நிதி ஒதுக்கீடு

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்காக அரசால் சுமார் 6 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாவும், புத்தளம் மாவட்டத்துக்கு 7 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவும், களுத்துறை மாவட்டத்துக்கு 4 இலட்சம் ரூபாவும், கண்டி மாவட்டத்துக்கு 2 இலட்சத்து 19 ஆயிரத்து 228 ரூபாவும், கேகாலை மாவட்டத்துக்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவும், வவுனியா மாவட்டத்துக்கு 78 ஆயிரத்து 500 ரூபாவும், மாத்தறை மாவட்டத்துக்கு 40 ஆயிரம் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உதவிகள்

வறட்சி மற்றும் நீரில் உப்பு கலந்துள்ளமையால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள 13 மாவட்டங்களுக்கு 207 நீர் பவுஸர்களும், 7471 குடிநீர் தாங்கிகளும் அரசால் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 26 நீர் பவுஸர்களும், 118 குடிநீர் தாங்கிகளும், வவுனியா மாவட்டத்துக்கு 15 நீர் பவுஸர்களும், 401 குடிநீர் தாங்கிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மாவட்டங்களுக்கும் அவை வழங்கப்பட்டுள்ளன.

தீப்பரவல்

வறட்சியான காலநிலையால் வனப்பிரதேசங்களில் திடீர் தீப்பரவல்கள் ஏற்படுகின்றமை அதிகரித்துள்ளன என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தீப்பரவல்கள் இடம்பெறும் போது அதைக் கட்டுப்படுத்துவதற்காக முப்படையினர் இனங்காணப்பட்டுள்ள மாவட்டங்களில் 24 மணித்தியாலங்களுக்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அத்தோடு 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக இவ்வாறான சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்க முடியும் என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தீப்பரவல் இடம்பெறும் பிரதேசங்களை அண்மித்து வாழ்கின்ற மக்கள் மிகுநத அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே வரை வெப்பம்

தற்போது இடப்பருவப் பெயர்ச்சி ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் வரை இடப்பருவப் பெயர்ச்சி நிலவும் என்பதால் வரட்சியான வானிலை நீடிக்கும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வடைகின்றமையால் நேற்று சனிக்கிழமை முதல் ஹங்குன்கல்ல, கனேகொட, களுபோவிட்டியான, கெட்டவல, வளல்கொட, சூரியவௌ மற்றும் கல்கடுவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.12 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலைமை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

அறிவுறுத்தல்கள்

சூழல் வெப்பநிலை அதிகரிக்கும்போது மனிதர்களின் உடல் வெப்பநிலையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதால் அதிகளவான சுத்தமான நீரை பருகுதல், கூடுதலாக வெயிலில் செல்லாதிருத்தல், உடல் சுகவீனமுற்றதாக உணர்ந்தால் உடனே வைத்தியசாலை செல்லுதல், குழந்தைகளை வெயிலில் அணுப்பாதிருத்தல், மற்றும் இள நிறத்திலான ஆடைகளை அணிதல் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *