‘பட்ஜட்’டை எதிர்த்து நம்பிக்கையை வெளிப்படுத்துங்கள் – சு.கவுக்கு மஹிந்த அணி நிபந்தனை!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான இரண்டாம் சுற்று பேச்சு (21) இன்று முற்பகல் 11 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

புதிய கூட்டணிக்கான சாத்தியப்பாடுகள் குறித்தும், கட்சி யாப்பு தயாரிப்புக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் நிலைப்பாட்டிலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இருக்கின்றது.

எனினும், ‘பட்ஜட்’டின் இரண்டாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது, எதிர்த்து வாக்களிக்காமல் – சுதந்திரக்கட்சி நடுநிலை வகித்தது. சு.கவின் இந்த முடிவானது மஹிந்த அணியை கடுப்பாக்கியது.

பிரசன்ன ரணதுங்க உட்பட மேலும் சில கூட்டுஎதிரணி எம்.பிக்கள், சு.கவின் இந்த அணுகுமுறையை சரமாரியாக விமர்சித்ததுடன், அக்கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைக்க கூடாது எனவும் குரல் எழுப்பினர்.

இதனால், இரண்டாம் சுற்று பேச்சு நடைபெறுமா என்ற சந்தேகம் மேலோங்கியது. எனினும், ‘பட்ஜட்’மீதான இறுதி வாக்கெடுப்பின்போது, சுதந்திரக்கட்சி கைகொடுக்கும் என மஹிந்த நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

எனவே, இன்றைய சந்திப்பின்போது, எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள ‘பட்ஜட்’மீதான இறுதி வாக்கெடுப்பில் அதற்கு எதிராக வாக்களித்து நம்பிக்கையை வெளிப்படுத்துமாறு, பொதுஜன பெரமுனவின் சார்பில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

அக்கோரிக்கையைஏற்று, 5 ஆம் திகதி சுதந்திரக்கட்சி எதிராக வாக்களிக்கும் பட்சத்திலேயே புதிய கூட்டணிக்கான அடுத்தக்கட்ட சந்திப்புகள் சாத்தியமாகும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் ‘புதுச்சுடர்’ இணையத்திடம் தெரிவித்தார்.

………….

முதல் சுற்று சந்திப்பு தொடர்பான செய்தி…..

‘மொட்டு – கை சங்கமம்’ – ஒரு மணிநேரம் பேச்சு! அடுத்த சந்திப்பு 21 இல்!!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *