‘மொட்டு – கை சங்கமம்’ – ஒரு மணிநேரம் பேச்சு! அடுத்த சந்திப்பு 21 இல்!!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பான முதல் சுற்று பேச்சு வெற்றிகரமாக முடிவடைந்தது என்று சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. இன்று (14) தெரிவித்தார்.

அத்துடன், இருதரப்புக்குமிடையிலான அடுத்த சுற்றுப்பேச்சு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டாக உடைந்துள்ளது.

கூட்டணி சிந்தனை உதயம்!

குறித்த கூட்டணிலிருந்து வெளியேறி புதிய கட்சியை ( ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) மஹிந்த அணி ஆரம்பித்ததுடன், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்கி வரலாற்று வெற்றியையும் பதிவுசெய்தது.

தற்போது மஹிந்தவும், மைத்திரியும் இணைந்துள்ளதால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ( வெற்றிலைச்சின்னம்) மீண்டும் பலப்படுத்துவதற்குரிய முயற்சியில் சு.க. இறங்கியது. எனினும், இதற்கு மஹிந்த தரப்பு பச்சைக்கொடிகாட்ட மஹிந்த தரப்பு மறுத்துள்ளது.

அத்தோடு தமது அணியில்வந்து இணையுமாறு சுதந்திரக்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. தாமரை மொட்டியிடம் சரணடைவதற்கு சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர்.

இதையடுத்தே புதிய கூட்டணி அமைத்து பொதுசின்னத்தின்கீழ் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரு தரப்புகளிலிருந்தும் பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற சந்திப்பு

இரண்டு குழுக்களுக்குமிடையிலான முதல்கட்ட உத்தியோகப்பூர்வ சந்திப்பு  , கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

10.30 மணிமுதல் 11.30 மணிவரை நடைபெற்ற கலந்துரையாடலில், புதிய கூட்டணி அமைப்பதற்கு தடையாக உள்ள காரணங்கள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.

புதிய கூட்டணி வெற்றிகரமாக மலரவேண்டுமெனில் இரு தரப்பும், புரிந்துணர்வுடனும், விட்டுக்கொடுப்புடனும் செயற்பட வேண்டும் என இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

சுதந்திரக்கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, உப தலைவர் திலங்க சுமதிபால, முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹன லக் ஷ்மன் பியதாச ஆகியோரும்,பொதுஜன பெரமுனவின் சார்பில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், டளஸ் அழகப்பெரும எம்.பி. ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட தயாசிறி ஜயசேகர,

” இன்றைய பேச்சு சிறந்த ஆரம்பமாக அமைந்தது. வெற்றியை நோக்கி பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அடுத்த சுற்று சந்திப்பு 21 ஆம் திகதி நடைபெறும்.” என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட டளஸ்,

” கூட்டணிக்கான பெயர், சின்னம், தலைவர் யார், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் யார் போன்ற விடயங்கள் எல்லாம் இறுதிக்கட்டத்தி முன்னெடுக்கப்படவேண்டியவை. முதலில் கூட்டணி உருவாவதற்குரிய சூழலை உருவாக்க வேண்டும். அது குறித்தே கலந்துரையாடப்பட்டது.” என்றார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *