FeaturesLead NewsLocal

கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் தங்கவேண்டிய அவசியம் இல்லை! – ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் தங்கியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் விடயம் தொடர்பாக நான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருப்பதோடு, அது தொடர்பாக தங்களோடு கலந்துரையாடியும் உள்ளேன்.

இவ்விடயம் தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சுடனும் ஆயுதப் படை அதிகாரிகளுடனும் நான் தொடர்புகொண்டு எடுத்துக் கூறியுள்ளேன்.

கேப்பாப்பிலவிலுள்ள 70 ஏக்கர் பரப்புக்கொண்ட காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

இந்தக் காணிகள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் பரம்பரை பரம்பரையாகப் பல நூற்றாண்டு காலம் சொந்தமாகவிருந்தன.

அவர்கள் அதில் தங்கிவாழ்ந்து தமது சமூக, கலாசார மற்றும் சமய நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்தியும் வந்தனர். இக்கணிகள் மீது அவர்களுக்குப் பெரும் பற்றுதல் உண்டு.

தமது இக்காணிகள் தமக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கோரி அவர்கள் 2017 மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் (இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக) இக்காணிகள் முன்னே தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆயுதப் படையினர் ஒத்துழைத்து கேப்பாப்பிலவிலுள்ள கணிசமானளவு காணிகளை விடுவித்துள்ளனர். எனினும், ஏறத்தாழ 70 ஏக்கர் காணி இன்னும் விடுவிக்கப்படாதுள்ளது.

பாதுகாப்பு நோக்கங்களுக்காகத் தேவைப்படின், பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தக்கூடிய போதுமான அரச காணிகள் இந்தக் காணிகளுக்கு அருகாமையில் உள்ளன.

அவர்கள் அந்த அரச காணிகளுக்குச் சென்றால், இந்தத் தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்காக இழப்பீடு செலுத்தவேண்டிய தேவை எதுவும் இராது.

இப்புலம்பெயர் தமிழ் மக்கள் இந்தக் காணிகள் மீது மட்டற்ற பற்றுகொண்டுள்ளனர். எனவே, தமது அக்காணிகளைத் திரும்பப் பெறுவதில் அவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.

குறிப்பாக இக்காணிகளை விடுவிப்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கிய ஒரு பெரும் முன்னெடுப்பாக அமையும்” – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading