முற்போக்கு கூட்டணியை ஒழிக்க கறுப்பாடுகள் கங்கணம்!

’குறுகிய காலப்பகுதிக்குள் அரசியல் களத்தில் பல சாதனைகளுடன் வீறுநடைபோடும் தமிழ் முற்போக்கு கூட்டணியை இல்லாதொழிப்பதற்கு கறுப்பாடு கூட்டமொன்று கங்கணம் கட்டி செயல்பட்டுவருகின்றது.

இதன்காரணமாகவே சிறு பின்னடைவைக்கூட வரலாற்று தோல்வியென ஊதிப்பெருக்கி பிரசாரம் செய்து எமது கூட்டணிக்கு எதிராக ‘நயவஞ்சகப்போர்’ தொடுக்கப்படுகின்றது.

இதற்கெல்லாம் அஞ்சி, நாம் ஓடி ஒளியப்போவதில்லை.  பனித்துளியைக் கண்டு பகலவன் அஞ்சுவதா? எவர் போற்றினாலும், எதிரிகள் மண்வாரிவீசி தூற்றினாலும் மக்களுக்கான எமது பயணம் தொடரும். அதை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.’’

-இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார் தெரிவித்தார்.

வரவு – செலவுத்திட்டத்தை மையப்படுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் பிரசாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வேலுகுமார் எம்.பியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

‘’ அன்று அமரர் செளமியமூர்த்தி தொண்டமான், சந்திரசேகரன் ஆகியோரால்கூட செய்துமுடிக்கமுடியாமல்போன பல விடயங்களை தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று செய்துமுடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

சட்ட உரித்துடன் மக்களுக்கு காணியுரிமை வழங்கப்பட்டு, வீடமைப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டிருந்த – முகவரி அற்றவர்களாக வாழ்ந்த தோட்டத்தொழிலாளர்கள் இன்று சொந்தவீட்டில் – நிம்மதியாக பெருமூச்சுவிடுகின்றனர்.

அதுமட்டுமல்ல, தோட்டப்பகுதியையும் அரச இயந்திரத்துக்குள் உள்வாங்கும் வகையில் பிரதேச சபை சட்டத்தை திருத்தியமைத்ததுடன், மலையக அபிவிருத்தி அதிகாரசபையையும் உருவாக்கியுள்ளோம். மேலும் பல திட்டங்கள் கலந்துரையாடல் மட்டத்தில் இருக்கின்றன.  இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியில் நாம் முழுவீச்சுடன் இறங்கியுள்ளோம்.

தமிழ் முற்போக்கு  கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால், மலையக மக்களுக்கான அனைத்து தீர்வுகளையும் தங்கதட்டில் வைத்து எவரும் தரப்போவதில்லை. சில விடயங்கள் கிடைக்கின்றன. மேலும் பலவற்றை நாம் பேச்சு  நடத்தி – போராடி பெற்றுவருகின்றோம்.

இலக்கை  நோக்கிய இப்பயணத்தில் சற்று தாமதம் ஏற்படலாம், பின்னடைவுகள் வரலாம். அவற்றை தோல்வியாக கருதி – மனம் நொந்து ஓரமாக ஒதுங்கினால் எதுவும் நடக்கப்போவதில்லை.

தாமதம் – பின்னடைவுகளை தோல்விகளாக கருதமுடியாது. அவற்றை அடைவதற்கு தடைகளாக இருப்பவற்றை இனங்கண்டு அவற்றை படிக்கற்களாக மாற்றியமைக்கவேண்டும். அதுதான் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் ‘ஸ்டைல்.’ மாறாக பின்னடைவு ஏற்பட்டால் துவண்டுபோய் ஒப்பாரி வைக்குமளவுக்கு நாம் கோழைகள் கிடையாது.

அனைவருக்கும் கருத்து  சுதந்திரம்  இருக்கின்றது. குறைகளை  சுட்டிக்காட்டும் உரிமையும் இருக்கின்றது. இப்பணிகளை நேர்கொண்ட பார்வையுடன்  செய்யவேண்டும். அவ்வாறு சிலர்  செயற்படுகின்றனர்.  அவர்களின்  ஆலோசனைகளை நாம் உள்வாங்குகின்றோம்.

ஆனால், இன்று சில தொழிற்சங்கங்களும், அவர்களின்  அல்லக்கைகளாக செயற்படுபவர்களும் என்ன செய்கின்றனர்.? எதற்கெடுத்தாலும் விமர்சனம். நன்மையிலும் தீமையையே அவர்களின் விழிகள் தேடுகின்றனர்.

முற்போக்கு கூட்டணி ஒழிய வேண்டும், மலையகத்தில் மக்களை அடக்கி – ஒடுக்கி தனிக்காட்டு ராஜவாக வாழ வேண்டும் என்பதே இந்த கறுப்பாட்டு கூட்டத்தின் கபடநோக்கமாகும். இதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம்.’’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *