’20’ சிறுபான்மையினக் கட்சிகளுக்கான மரணப்பொறி!

”அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறைமையை முற்றாக இல்லாதொழிக்க கோரி மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு,

‘’ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப்பூ சக்கரை என்பது போல், இலங்கையில் உரிமைகள்  மறுக்கப்பட்டு வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது ஏதேனுமொரு வழியில் பயனுடையதாக – பாதுகாப்பு கவசமாக இருந்து வருகின்றது. எனவே, அந்த முறைமையை  நாம் பாதுகாக்க வேண்டும். மாறாக இல்லாதொழிப்பதற்கு துணைபோகக்கூடாது.

ஜனாதிபதித் தேர்தலின் போதுதான் முழு இலங்கையும் ஒரு தேர்தல் தொகுதியாக கருதப்படுகின்றது. சிறுபான்மையின மக்களின் வாக்கு வங்கியும் தீர்மானிக்கும் சக்தியாக மாறுகின்றது. இக்காலப்பகுதியில்தான் தமிழ் பேசும் மக்களுக்கு தமது உரிமைகளை வலியுறுத்திப் பெறுவதற்குரிய வழிகள் திறக்கப்படுகின்றன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீடிப்பதால்தான், சிறுபான்மையின மக்கள் மீதும் கட்டாயம் கவனம் செலுத்தியாக வேண்டும், அவர்களின் கோரிக்கைள் நிறைவேற்றப்பட  வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அரச தலைவர்கள் வருகின்றனர்.
இம்முறைமை நீக்கப்படுமானால் சிறுபான்மையின  மக்கள் பேரம் பேசும் சக்தியை இழப்பதுடன், அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்படும் சூழ்நிலையும் உருவாகும்.
நிறைவேற்று அதிகார  ஜனாதிபதி முறைமையில் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்த சரத்துகள் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நீக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலும் அதில் கையடிக்கவேண்டிய அவசியம் இல்லை.
20 ஆவது திருத்தச்சட்டமூலமானது சிறுபான்மையின மக்களின் அரசியல் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். ஆகவே, ஜனநாயகம் என்ற போர்வையில் அதற்கு சிறுபான்மையின கட்சிகள் ஆதரவு வழங்கினால் இறுதியில் அது இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய கதையாகவே அமைந்துவிடும்.
சுருக்கமாக சொல்வதாயின், 20 ஆவது திருத்தச்சட்ட மூலமானது சிறுபான்மையினக் கட்சிகளுக்கான மரணப் பொறியாகும். அதை நிதானமாகக் கையாண்டு தோற்கடிக்க வேண்டும்.
எமது கட்சியும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் இந்நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன. அனைத்து சிறுபான்மையினக் கட்சிகளும் 20 இற்கு எதிராக ஓரணியில் திரளும் என நம்புகின்றோம்.
அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே ஜே.வி.பி. 20 ஐ கொண்டுவருகின்றது. அதை எதிர்ப்பதால் ஜனநாயக விரோதிகள் என்ற முத்திரையை எம்மீது குத்துவதற்கு அக்கட்சி முயற்சிக்கலாம்.
நாம் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் அல்லர். எம்மக்களுக்கு அநீதி இழைக்கும் யோசனையாக இருப்பின் அதை எந்தக்கட்சி கொண்டுவந்தாலும் எதிர்ப்போம்.
ஐந்து நட்சத்திர ஜனநாயகத்துக்கு ஆசைப்பட்டு எம்மக்களுக்கு தற்போது இருக்கும் ஜனநாயக உரிமைகளை இழப்பதற்கு நாம் தயாரில்லை. அதாவது,‘கோட்சூட்’டுக்கு ஆசைப்பட்டு கட்டியிருக்கும் கோவணத்தை இழக்கும் அரசியலை நாம் நடத்தவில்லை.’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *