மகா சிவராத்திரி விரதத்துக்கு முத்தலைவர்களும் வாழ்த்து!!!

மகா சிவராத்திரி விரதத்தையொட்டி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

சிவபெருமானுக்காக நித்திரையைத் தவிர்த்து, உண்ணாவிரதம் இருந்து தியானத்தின் மூலம் தமது ஆன்மீக ஒழுக்கத்தை அடைவதற்காக செயற்படும் ஒரு மத ரீதியான புனித நாளாகவே சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் வாழ்ந்துவரும் இந்து பக்தர்களின் அந்த ஆன்மீக பிரார்த்தனை நிறைவேறி அவர்களின் வாழ்க்கை நல்வழிப்படும் பட்சத்தில் அது அவர்களுடன் இணைந்து வாழும் ஏனைய சமூகத்தவர்களின் வாழ்க்கையிலும் ஔியேற்றுவதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், அது மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும் எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஏற்றப்படும் தீபத்தினால் உலகின் இருள் நீங்குவதைப் போன்று உலகவாழ் இந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஔிபெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

இன, மத, கலாசார பல்வகைமையின் அழகு மற்றும் பெறுமதியை அறிந்துகொள்வதற்கு மகா சிவராத்திரி தினம் நம் அனைவருக்கும் பிரகாசத்தின் தினமாக அமையும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மகா சிவராத்திரி தினத்தையொட்டி வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மகா சிவராத்திரி தினத்தை மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் இந்து மக்களுக்காக பிரார்த்திப்பதுடன், ஆன்மீக விடுதலை மூலம் சாந்தி, சமாதானம் நிலைபெற வேண்டும் என வாழ்த்துவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்து மதத்தில் காணப்படுகின்ற சிறந்த அனுஷ்டானங்களும் விழாக்களும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதுடன் மாத்திரமின்றி இலங்கை மக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்திக்கொள்வதற்கும் துணைபுரிவதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இப் புனித மகா சிவராத்திரி தினத்தில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்ற
அனைவருக்கும் இறைவனின் அருட்கடாட்சமும் அருளும் கிட்ட வேண்டும் எனவும், சுபீட்சம்
மற்றும் ஒற்றுமை என்பவற்றின் தாற்பரியத்தை பிரதிபலிக்கச் செய்கின்ற விழாவொன்றைக்
கொண்டாடுவதற்கு வாய்ப்புக்கிட்ட வேண்டும் எனவும் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து சமூகங்களுக்கு இடையிலும் நட்புறவுமிக்க அன்பு கலந்த உறவுகள் வலுவடைந்து
சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்குரிய காலமொன்று உருவாக வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *