ஒசாமாவின் மகன் கறுப்பு பட்டியலில்! சொத்துகளும் முடக்கம்!!

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனை ஐ.நா. பாதுகாப்பு சபை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவராக செயல்பட்டு வந்த சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன், அமெரிக்க சிறப்பு படையால் பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.  இவரது மகன் ஹம்சா பின்லேடன் (வயது 29).
பின்லேடன் மறைவுக்கு பின் அந்த இயக்கத்தின் தலைவராகும் முயற்சியில் ஈடுபட்டு வந்த ஹம்சா பின்லேடன், கடந்த 4 வருடங்களாக ஆடியோ மற்றும் வீடியோ வழியே இயக்க உறுப்பினர்களிடம் தகவல்களை அனுப்பி, பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்கா மீது தாக்குதல்களை நடத்த வலியுறுத்தி வந்துள்ளார்.
இதனை அடுத்து அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.  இந்த நிலையில் சவுதி அரேபியாவில் பிறந்தவரான ஹம்சாவின் குடியுரிமை அந்நாட்டு அரசால் திரும்ப பெறப்பட்டு உள்ளது.
அல் கொய்தா இயக்கத்தின் தலைவராக இருந்து வரும் அய்மன் அல் ஜவஹிரிக்கு அடுத்து அதன் தலைவராக ஹம்சா பின்லேடன் வர கூடும் என தகவல் தெரிவிக்கின்றது.
இதனால் 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் அவரை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.  இதன்படி சர்வதேச பயண தடை, சொத்துகள் முடக்கம் மற்றும் ஆயுதங்கள் விற்பனை செய்ய சர்வதேச அளவில் தடை ஆகியவை அவருக்கு எதிராக விதிக்கப்படுகிறது.
சர்வதேச பயண தடையால் ஹம்சா பிற நாடுகளுக்குள் நுழையவோ அல்லது பயணம் செய்யவோ தடை விதிக்கப்படுகிறது.  சொத்துகள் முடக்கத்தின்படி, நிதியுதவி மற்றும் பிற நிதிசார் சொத்துகள் அல்லது பொருளாதார வளங்கள் அனைத்து நாடுகளாலும் முடக்கம் செய்யப்படும்.
இதேபோன்று சர்வதேச அளவிலான ஆயுத விற்பனை செய்ய தடையின்படி, ஆயுதங்களையோ அல்லது அதுதொடர்புடைய அனைத்து வகையான பொருட்கள், உதிரி பாகங்கள் ஆகியவற்றின் நேரடி அல்லது மறைமுக விநியோகம், விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.
தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு தொழில் நுட்ப ஆலோசனை, உதவி அல்லது ராணுவ நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பயிற்சி வழங்கவும் அனைத்து நாடுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *