உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு அமைக்க மைத்திரிபாலவும் ஒப்புதல்! – செவ்வாயன்று அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படலாம்?

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் அமைக்கப்பட்டது போன்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு, அனுமதி கோரி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருத்தங்களுடன் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று அறியமுடிகின்றது.

திருத்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெறும் என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வு நாளை ஆரம்பமாகின்ற நிலையில், இலங்கை அரசு அவசர அவசரமாக இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் கலப்புப் பொறிமுறையூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரே, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று கொழும்பைத் தளமாகக் கொண்ட சிவில் அமைப்புக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. அத்துடன் தென்னாபிரிக்கா பாணியிலான பொறிமுறை இலங்கையில் வெற்றியளிக்காது என்றும் கூறப்படுகின்றன.

இதேவேளை, தென்னாபிரிக்காவில் கூட இந்தப் பொறிமுறை தோல்வியடைந்த ஒன்று என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே, இந்த ஆணைக்குழுவை அமைக்கும் முயற்சிகளில் இலங்கை அரசு வேகமாக ஈடுபட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆணைக்குழுவை அமைக்கும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் ஆராய்வதற்கு தனக்கு அவகாசம் தேவை என்று கூறியிருந்தார்.

அதனை ஆராய்ந்து பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் சில திருத்தங்களை மேற்கொண்டு புதிய அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்பிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதேவேளை, கடந்த 15ஆம் திகதி கிளிநொச்சியில் ரணில் விக்கிரமசிங்க, போரின்போது இடம்பெற்ற சம்பவங்களை மறப்போம் மன்னிப்போம் என்று கூறியிருந்தார்.

இந்த ஆணைக்குழு அமைக்கும் முயற்சிக்கான முன்னேற்பாடாகவே அவர் இதனைக் கிளிநொச்சியில் தெரிவித்திருந்தார் என்று அரசியல் விமர்சகர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தனர்.

ரணிலின் இந்தக் கருத்துக்கு தமிழர் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *