பாகிஸ்தானில் இலங்கைப் பிரஜை கொலை தொடர்பில் இம்ரான்கான் கடும் கண்டனம்!

பாகிஸ்தானில் இலங்கைப் பிரஜை ஒருவர் சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, எரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்தின் காரணமாக இது பாகிஸ்தானுக்கு வெட்கத்துக்குரிய நாளொன்றாக மாறியுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் விசாரணைகளை மேற்பார்வை செய்து வருவதாகவும், விசாரணைகளில் எந்த தவறும் இடம்பெற இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், சட்டத்தின் முழு பலத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கை பிரஜையின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து, கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் பாகிஸ்தானின் சியால்கொட் எனும் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவத்தையடுத்து, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, பாதுகாப்புத் தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தனியார் தொழிற்சாலையொன்றில் ஏற்றுமதி முகாமையாளராக கடமையாற்றி வந்த இலங்கைப் பிரஜையொருவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்

கொலைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அந்த நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், CCTV காட்சிகளைப் பயன்படுத்தி குற்றவாளிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் 48 மணிநேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உரிய தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் குறித்த இலங்கைப் பிரஜையை தாக்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், நபிகள் நாயகத்தின் பெயரைக் கொண்ட சுவரொட்டிகளை குறித்த நபர் அவமதித்துள்ளதாக தொழிற்சாலை ஊழியர்கள் சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளனர்.

எனினும், தொழிற்சாலை ஊழியர்களை இந்த சம்பவத்துக்குத் தூண்டிய விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 10 விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *